அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி - தினகரன்

ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

சென்னை: ஜாக்டோ அமைப்புடன் அரசு நேற்று நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.  பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ அமைப்பு தனது முடிவை வெளியிடும் என்று தலைவர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தி
ல் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் ஊதியம், பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தையே திரும்ப நடைமுறைப்படுத்துதல், ஆறாவது ஊதியக் குழுவின் இடம் பெற்றுள்ள ஊதிய முரண்பாடுகளை களைதல், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்தல், தமிழ் வழிக் கல்வியை உறுதிப் படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முக்கியமானவை.



கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு தரப்பில் ஆசிரியர்களை அழைத்து பேசவே இல்லை. இதையடுத்து 27 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து மீண்டும் ஜாக்டோ அமைப்பை உருவாக்கினர். அந்த அமைப்பின் சார்பில் 4 கட்ட போராட்டங்கள் நடந்தது. அதற்கும் அரசு தரப்பில் கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து, ஜனவரி மாதம் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ முடிவு செய்தது. இதன்படி கடந்த வாரம் மாவட்ட வாரியாக 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தினர் அதில், சாலை மறியல், கோட்டை நோக்கி பேரணி, வகுப்பு புறக்கணிப்பு என போராட்டம் வலுவடைந்தது. வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 75 சதவீத பள்ளிகள் இயங்காமல் முடங்கின. அதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்தனர். 

இதையடுத்து, ஜாக்டோ அமைப்பு அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்கப் போவதாக தெரிவித்தது. இதனால் அரண்டு போன அரசு ஜாக்டோ அமைப்பு மற்றும் உள்ள அமைப்புகளையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நேற்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தலைமைச் செயலகத்துக்கு நேற்று மதியம் 3 மணிக்கு வந்த ஆசிரியர் சங்கத்தினர், போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர் சங்கத்தினரை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பை மட்டுமே அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மற்றவர்கள் வந்தால் நாங்கள் பேச வரமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 4 மணிக்கு தொடங்க வேண்டிய பேச்சுவார்த்தை நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. 

நிதித்துறை, பள்ளிக் கல்வித்துறை, மின்துறை, உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள், பொதுத்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் அரசுத் தரப்பில் பங்கேற்றனர்.  அதில் ஜாக்டோவில் இணைந்துள்ள 22 சங்கங்களின் சார்பாக மாநில தொடர்பாளர் இளங்கோவன், மீனாட்சிசுந்தரம், முத்துசாமி, சத்தியமூர்த்தி, தியாகராஜன், சேகர், தாஸ், சுரேஷ், பிரபாகரன், மாயவன் ஆகியோர் உள்பட 22 சங்கங்கப் பிரதி நிதிகள் பங்கேற்றனர். அனைத்து பிரதிநிதிகளையும்  பேசவிட்டனர். ஒவ்வொருவரும் சுமார் 10 நிமிடம் வரை கோரிக்கை குறித்து பேசினர். 

இது சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. அனைவரும் பேசிமுடித்ததும், ஆசிரியர்கள் கோரிக்கை மீது அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியே கருத்து தெரிவிக்காமல், உங்கள் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்கிறோம். விரைவில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். பின்னர் வெளியில் வந்த ஜாக்டோ அமைப்பினர் அளித்த பேட்டி:

‘அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் எங்கள் கோரிக்கைகள் குறித்து எடுத்து சொன்னோம். முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்வதாகவும், விரைவில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சட்டப் பேரவையின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரும் என்று ஜாக்டோ எதிர்பார்க்கிறது. அறிவிப்பு வராத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ அறிவிக்கும். இவ்வாறு ஜாக்டோ அமைப்பு தெரிவித்தது. 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank