பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி

பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதி வெளியிடப்பட்டது. அதன் விவரம்:-

 செயல்படுத்தப் போகும் திட்டங்கள்: "நம்மாழ்வார் விவசாயத் திட்டம்' எனும் பெயரில் நாற்று நடுவதற்குரிய கருவிகளும், இயற்கை உரங்களும் மானிய விலையில் வழங்கப்படும்.

 பிறநாட்டில் விவசாய முறைகளைக் கற்றுக்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு, ஒவ்வோர் ஆண்டும் 5 ஆயிரம் விவசாயிகள் அழைத்து செல்லப்படுவர்.
 கீழ்வெண்மணி ஓய்வூதியத் திட்டமாக, நிலம் இல்லாத 60 வயது நிரம்பிய 30 லட்சம் விவசாயிகளுக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.
 சிங்காரவேலர் மீனவர் ஓய்வூதியத் திட்டமாக 60 வயது நிரம்பிய 10 லட்சம் மீனவர்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.
 கக்கன் கைத்தறி நெசவாளர் ஓய்வூதியத் திட்டமாக 60 வயது நிரம்பிய 10 லட்சம் நெசவாளர்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.
 அப்துல் கலாம் கிராம பொலிவுத் திட்டமாக, 12,620 கிராமங்களில் தனி நபரின் குடும்ப வருமானம் குறைந்தது மாதம் ரூ.25 ஆயிரம் என்ற அளவிற்கு வழிவகை செய்யப்படும்.
 திருநங்கைகளுக்கு தனிக் கல்லூரி: சிறப்புக் குழந்தைகள் தங்கிப் படிக்க பிரத்யேக வசதியுடன் தனி பள்ளிக்கூடம், கல்லூரிகள் உருவாக்கப்படும். திருநங்கைகள் தங்கிப் படிக்க அனைத்து வசதியுடன் தனிப்பள்ளிக்கூடம், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.
 காலை உணவு: குடும்ப சூழ்நிலையின் காரணமாக, காலை உணவு கிடைக்காமல் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவதால், அவர்கள் பசியாற எளிமையான உணவு வழங்கப்படும். பால், முட்டை, சுண்டல், சத்துமாவு கஞ்சி என விதவிதமாக எளிமையான உணவு வழங்கப்படும்.
 கனிம வளங்கள் தேசிய மயம்: மணல், தாதுமணல், கிரானைட் போன்ற அனைத்து இயற்கை கனிம வளங்களும் தேசிய மயமாக்கப்படும்.
 பெட்ரோல் விலை குறைக்கப்படும்: தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 45-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.35-க்கும் விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022