பள்ளிகள் விதிமுறை மீறல் 10, பிளஸ் 2 புத்தக விற்பனைக்கு தடை.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது; அதிக தேர்ச்சி காட்டுவது என்ற இலக்கை நோக்கியே பள்ளிகள்இயங்குகின்றன. குறிப்பாக, சில தனியார் பள்ளிகள், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை தான், தங்கள் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றன.
இந்த அடிப்படையில், சில தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பாடங்களும்; பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களும் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, தற்போதே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்களை வாங்க, பெற்றோரை தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன.மேலும் பல பள்ளிகள், 'ஆன்லைன்' மூலம், தற்போதே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்கள் கேட்டு, பாடநுால் கழகத்துக்கு விண்ணப்பித்துள்ளதால், பாடநுால் கழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, பல புகார்கள் வந்ததால், தற்போதைய நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் விற்பனை செய்ய, பாடநுால் கழகம் தடை விதித்துள்ளது. வாய்மொழியாக பாடநுால் விற்பனை மைய ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அச்சடிப்பில் குளறுபடி ஏற்படும்! இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு துவங்க உள்ள நிலையில், தனியார் பள்ளிகள், விதிமுறைகளை மீறி பாடம் நடத்துகின்றன. இதை, மெட்ரிக் பள்ளி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
தனியார் பள்ளிகளின் செல்வாக்கால்,விதிமுறை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், எங்களுக்கு தான் பிரச்னை ஏற்படுகிறது. தற்போது, 'ஸ்டாக்' இருக்கும் புத்தகத்தை விற்பதால், வரும் ஆண்டில் எவ்வளவு மாணவர்களுக்கு எவ்வளவு புத்தகம் தேவை என்ற கணக்கில் குழப்பம் ஏற்பட்டு, புத்தக அச்சடிப்பில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், புத்தக விற்பனையை நிறுத்தி விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.