14 வயது தாண்டாதவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது
'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, ௧௪ வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரலில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மார்ச் 4ம் தேதி, பிளஸ்
2; மார்ச் 15ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலருக்கு, பல காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதில், பள்ளி மாணவர்களுக்கு வயது பிரச்னையே காரணமாக இருந்ததால், அதை சரி செய்து மீண்டும் அனுமதிப்பது குறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.இதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளி மாணவர்கள் எழுத, வயது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் சான்று அவசியம் l பொதுத்தேர்வு துவங்கும் மார்ச் மாதம், முதல் நாளில், மாணவர்களுக்கு, 15 வயது முடிந்திருக்க வேண்டும் l மாணவர்களுக்கு, 14 ஆண்டு, ஆறு மாதம் ஆகியிருந்தால், வயது வரம்பு தளர்வு சலுகை வழங்கலாம் l வயது வரம்பு தளர்வு சலுகையை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் வழங்கலாம். ஆனால், வயது வரம்பு தளர்வு சான்றிதழ் பெற, மருத்துவரிடம் இருந்து பெற்ற உடல் நிலை தகுதி சான்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, 'அந்த மாணவர் மன அழுத்தமின்றி, தேர்வு எழுத முடியும்' என, மருத்துவர் கூற வேண்டும் l தனித்தேர்வர்களுக்கு, 14 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு வயது குறைவாக இருந்தால், இரண்டு ஆண்டு வரை வயது வரம்பு தளர்வு செய்யலாம்.