ரூ.1,500-க்கு "வை-ஃபை' மோடம் பிஎஸ்என்எல் அறிமுகம்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1,500-க்கு "வை-ஃபை மோடம்' பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை தொலைபேசி வட்டம் சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.700, அதற்கு மேல் மாதாந்திரக் கட்டணத்தில் பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 விலையில் "வை-ஃபை' மோடத்தைப் பெற முடியும்.
இந்த மோடத்துக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகையானது, ரூ.100 வீதம் 15 மாதங்களில் திருப்பி வழங்கப்படும். பி.எஸ்.என்.எல். வழங்கும் "வை-ஃபை மோடம்' கருவிக்கு 5 ஆண்டுகள் உத்தரவாதம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அங்கீகாரம் பெற்ற பிஎஸ்என்எல் விற்பனை மையங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்களில் மோடம் கருவியைப் பெற்றுக் கொள்ளலாம். போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம். இதற்கு எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்தச் சிறப்புத் திட்டமானது, வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
நிறுவுதல் கட்டணமின்றி மறு இணைப்பு: பிராட்பேண்ட் சேவைக் கட்டணத்தைச் செலுத்தாமல், இணைப்பு துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சலுகையின் கீழ் மீண்டும் இணைப்பு வழங்கப்படும். மறு இணைப்பு வழங்கப்படும் போது, அதற்கென வாடிக்கையாளர்களிடம் நிறுவுதல் கட்டணமான ரூ.250 வசூலிக்கப்படமாட்டாது.
மேலும் ரூ.500 மதிப்பு கொண்ட ஒரு மாதத்துக்கான சலுகையும் வழங்கப்படும். இந்தச் சிறப்புச் சலுகையை, கடந்தாண்டு நவம்பர் 30-க்கு மேல் இணைப்பு துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பெற முடியும். வரும் 29-ஆம் தேதி வரை, இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.