தேர்தல் கமிஷனின் '1950' அழைப்புகளுக்கு பதில் கூற கூடுதல் ஊழியர்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க; சந்தேகங்களுக்கு விளக்கம் பெற; தேர்தல் பணியின் போது புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண், 1950 உள்ளது.
இந்த எண்ணை தொடர்பு கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதல் ஊழியர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று கூறியதாவது:கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் கூற, 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 15 பேர், காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை; 10 பேர், மாலை, 4:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை; ஐந்து பேர், இரவு, 11:00 மணி முதல் காலை, 8:00 மணி வரை பணிபுரிவர். அவர்களுக்காக, 15 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகள், புகார்கள் உடனுக்குடன், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தினமும் சராசரியாக, 2,800 அழைப்புகள் வருகின்றன. இரண்டு மாதங்களில், 1.20 லட்சம் பேர் அழைத்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், இதை விட கூடுதல் அழைப்புகள் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று டில்லி பயணம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இன்று டில்லி செல்கிறார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில், மே 22ம் தேதிக்குள், சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
இந்நிலையில், இன்று முதல் இரு நாட்கள், டில்லியில், ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம், தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தலைமையில் நடைபெற உள்ளது.இதில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இன்று டில்லி செல்கிறார். முதல் நாள் கூட்டத்தில், ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய, சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்குகிறார். இரண்டாம் நாள், சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள, ஐந்து மாநிலங்களிலும், மத்திய போலீஸ் படை, துணை ராணுவ வீரர்கள் எவ்வளவு பேரை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், தேர்தலை எத்தனை கட்டமாக நடத்துவது, எந்த தேதியில் தேர்தல் நடத்துவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படும்.