பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? 15 வகை தண்டனை அறிவிப்பு

இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கான தண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:


1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.


2. துண்டுத்தாள், விடைக்குறிப்பு வைத்திருப்பதை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், உடனடியாக மாணவரை வெளியேற்ற வேண்டும். துண்டுத்தாளை, மாணவர் பெயர் விவரத்துடன் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் விடைக்குறிப்பை பயன்படுத்தாவிட்டால், மறு நாள் தேர்வு எழுதலாம். துண்டுத்தாளை பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வுக்கான விடைத்தாள் நிறுத்தம்செய்யப்படும்; ஓர் ஆண்டு அல்லது அடுத்து வரும், இரண்டுபருவ தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும்.

3. ஒரு மாணவரை பார்த்து மற்றொரு மாணவர் எழுதினால், உடனேவெளியேற்றப்படுவார். பார்த்து எழுதியதற்கு சாட்சி இருந்தால், அந்த மாணவர் அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் அல்லது, ஓர் ஆண்டுக்கு, குறிப்பிட்ட பாடத்தைஎழுத முடியாது.

4.மாணவர் முழுவதுமாக காப்பியடித்தது தெரிந்து, தவறு நிரூபிக்கப்பட்டால், அனைத்து தேர்வுகளையும் எழுத முடியாது. அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் ரத்துசெய்யப்படும்.

5. அறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர் காப்பியடித்து, அது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது.

6. விடைத்தாளை எடுத்து சென்றாலோ, கிழித்து விட்டாலோ,அந்த தேர்வு முழுவதையும் எழுத முடியாது.

7. ஆள்மாறாட்டம் செய்து நிரூபிக்கப்பட்டால், நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது.

8. தன்னை தேர்ச்சி பெற செய்யும்படி, தேர்வு தாளிலோ, கடிதம் மூலமோ தேர்வுத்துறை அலுவலகத்துக்கோ, அல்லது தேர்வுத்துறை அதிகாரிகளுக்கோ கடிதம் எழுதினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.

9. தேர்வுத்துறை அதிகாரிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவரை காப்பியடிக்க விடாமல் தடுத்து, அவர்களை தேர்வு மையத்துக்கு வெளியே அனுப்பிய பின், தேர்வு மையத்திற்கு வெளியே, அதிகாரிகள், ஆசிரியர்களை மாணவர் மிரட்டி,திட்டினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.

10.மாணவர் வினாத்தாளை வெளியே, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

11. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கம் தர மறுத்தால், அந்த பருவத்தின் தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படும்.


12.விடைத்தாள் திருத்தத்தில், காப்பியடித்தது தெரிய வந்தால், அந்த மாணவர் இரண்டு பருவ தேர்வுகளை எழுத முடியாது.

13.விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள்தேர்வு எழுததடை.

14.விடைத்தாளில் பெயர், 'இனிஷியல்', அல்லது ரகசிய குறியீடு இட்டால், தேர்வு முடிவுகள் ரத்தாகும்.

15.வினாத்தாளில் விடை குறிப்பிட்டு பிற மாணவருக்கு கொடுத்தால், கொடுத்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.

பறக்கும் படைக்கு ஆள் பற்றாக்குறை
பொதுத் தேர்வின் போது, கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை அமைக்க, ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதனால், பல மாவட்டங்களில், பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூடஅனுபவம் இல்லாத ஆசிரியர்களை, பறக்கும் படையில் நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 2,420 தேர்வு மையங்களுக்கும், நிலையான கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படை என, இரண்டு வகை கண்காணிப்பு படைகள் அமைக்கப்படுகின்றன.
நிலையான படையினர், தேர்வு மையத்தில், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் திடீரென சென்று சோதனையிடுவர்; பறக்கும் படையினர் பல தேர்வு மையங்களுக்கு, திடீரென சென்றுசோதனையிடுவர்.நிலையான படைக்கும், பறக்கும் படைக்கும், ஏற்கனவே தேர்வுப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். 'ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்களை தேர்வு பணிக்கு அமர்த்தக்கூடாது' என, தேர்வு விதிமுறைகள் உள்ளன.

ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பறக்கும் படை அமைக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூட ஆகாத ஆசிரியர்களையும் பறக்கும் படை மற்றும் தேர்வுகண்காணிப்பு பணிகளில் அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அனுபவமிக்க ஆசிரியர் பலர் தேர்வு பணிக்கு முழுக்கு போட்டு விட்டனர்; சில ஆசிரியர்களுக்கு, வேண்டும் என்றே அதிகாரிகள் சிலர், தேர்வு பணி கொடுக்க வில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.பணி அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இடம் பெறும் போது, அவர்களால் சரியாக, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாது. 

மாணவர்களின் கவனம் சிதறும் வகையில் சோதனையில் ஈடுபட்டால், அது பிற மாணவர்களை பாதிக்கும். ஏதாவது, ஒரு அறையில், பறக்கும் படையிடம், காப்பியடித்த மாணவர் பிடிபட்டால், அந்த அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளராக உள்ள சீனியர் ஆசிரியரிடம், அனுபவமில்லாத பறக்கும் படை ஆசிரியர் விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் தேர்வுத்துறையின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.

ஆசிரியர்கள்அத்தாட்சி சான்றிதழ் பெற உத்தரவு
பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது. 
இதை தடுக்க,நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன் தான் பிரிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்வு நாளன்று காலை, 9:45 மணிக்கு, மாணவர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9:50 மணிக்கு, சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 

9:55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை காண்பித்து, இருவரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின், வினாத்தாள்கட்டினை பிரிக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10:10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்படும். 

10:15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின் மதியம், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு, மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank