பிளஸ் 2 தேர்வு இருவித விடைத்தாள் வழங்க திட்டம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என, இருவிதமான விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், நான்கு பக்கங்கள் மட்டுமே, கூடுதல் விடைத்தாளாகவும் வழங்கப்பட உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் புகைப்படம் அடங்கிய, 'பார்கோடு' உடைய முகப்பு தாள்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட உள்ளன. இதன்படி, * நான்கு பக்க விடைத் தாள் மட்டுமே, முதன்மை விடைத்தாளுடன் கூடுதல் பக்கமாக வழங்கப்படும் * முதன்மை விடைத்தாளாக, மொழிப் பாடங்களுக்கு, கோடிட்ட விடைத்தாள்கள், 30 பக்கங்கள் வழங்கப்படும் * முக்கிய பாடங்களானஉயிரியல், தாவரவியல், தலா 22; கணினி அறிவியல், 30; கணக்கு பதிவியலுக்கு, 46 பக்கங்கள் என, கோடிடப்படாத விடைத் தாள் வழங்கப்படும் * கணக்கு பதிவியலில், ௧ - 16 பக்கங்கள் கோடிடப்படாமலும்; மீதமுள்ள பக்கங்கள், கணக்கு பதிவியலுக்கான குறுக்கு கோடிட்ட பக்கங்களாகவும் இருக்கும் * மற்ற பாடங்களுக்கு, 38 பக்கங்கள் கோடிடப்படாத விடைத்தாள்கள் தரப்படும். அரை மதிப்பெண் உண்டு இந்த ஆண்டு முதல், அரை மதிப்பெண் வழங்க, முகப்பு தாளில், திருத்த பக்கத்தில் தனி இடம் ஒதுக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில், இரண்டு அரை மதிப்பெண்களை, ஒரு மதிப்பெண்ணாக கணக்கிட்டு பட்டியலில் கொடுத்தனர். இந்த முறை, அரை மதிப்பெண்ணை, தனியாகவே விடை திருத்த பட்டியலில் தர வசதி செய்யப்பட்டு உள்ளது.