தமிழ்நாட்டில் பி.எட் படிப்பு 2 வருடம் தான்: துணைவேந்தர் உறுதி.
தமிழ்நாட்டில் பி.எட் படிப்பு ஒரு வருடமா? இரண்டு வருடமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில் செயல்பட்டு வருகின்றது.
இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், 689 பி.எட். கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முன்பு ஒரு வருடம் பி.எட். படிப்பு இருந்தது. ஆனால் மத்திய அரசு 2 வருட பி.எட். படிப்பை அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழ்நாட்டில் 2 வருட பி.எட். படிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்.சி.இ.ஆர்.டி.) கல்லூரியின் முதல்வர் பிஎச்.டி. படித்திருக்க வேண்டும் என்றும், இட வசதியை அதிகரித்தும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக தனியார் பி.எட். கல்லூரிகள் சில உயர்நீதிமன்றத்தை நாடினர். புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேவை இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு சார்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பி.எட். படிப்பு எத்தனை வருடம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமியிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில் பி.எட். படிப்பு 2 வருடம் தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதியாக அவர் தெரிவித்தார்.