குளோபல் ஆசிரியர் விருதுக்கு 4 இந்தியர்கள் தேர்வு.
2016ம் ஆண்டிற்கான குளோபல் ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 50 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வெளியிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் 4 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். குளோபல் ஆசிரியர் விருது பெறுபவர்களின் டாப்10 பட்டியலில் 2 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களுக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் குளோபல் ஆசிரியர் விருது 2013ம் ஆண்டு முதல் வெர்கி பவுண்டேஷன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கல்வித் துறையில், மாணவர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்குள் பயனளிக்கும் விதமாக சேவை ஆற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
கல்வி அறிவு இல்லாததே சமூகம், அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் என பலவிதமான சர்வதேச பிரச்னைகளுக்கு காரணம் என்பதாலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. வெர்கி பவுண்டேஷன், யு.ஏ.இ., துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் சிற்றரசரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உலகின் தலைசிறந்த ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கூடி விருது பெறுபவர்களை தேர்வு செய்கின்றனர்.
உலகம் முழுதிலும் உள்ள 148 நாடுகளைச் சேர்ந்த 8000 பேர் குளோபல் ஆசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 50 பேரில் 4 பேர் இந்தியர்கள். டாப் 10 பட்டியலில் 2 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். தவல் பாத்யா, ராபின் சவ்ராசியா, சாந்தி கரம்செட்டி, ரஷ்மி கதுரியா ஆகிய 4 பேர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மார்ச் 13ம் தேதி துபாயில் நடக்கும் சர்வதேச கல்வி மற்றும் திறன்களுக்கான கருத்தரங்கில் வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களுக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 கோடி) பரிசும் வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு தேர்வு பெற்றவர்கள்:
ராபின் சவ்ராசியா: இவர் மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் கடத்தி வரப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் பெண் குழந்தைகள் என 12 முதல் 20 வயது வரையிலான பெண்களுக்கு இலவச, சேவை மனப்பான்மையோடு கல்வி கற்றுத் தருகிறார். இவர் தனது மாணவர்களுக்கு புரட்சியாளர்கள் என பெயரிட்டுள்ளார்.
தவல் பாத்யா: மும்பையைச் சேர்ந்த இவர், உயர் தேர்வுகளுக்கு தயாராகும் முறையை எளிமையாக கூறி 17 வயதில் தனது முதல் புத்தகத்தை எழுதினார். இவரது புத்தகங்கள் 14க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வேத கணிதத்தை எளிய முறையில் வகுத்து, 100 ஆண்டு காலண்டரை 5 நிமிடத்தில் மனப்பாடம் செய்து கணிக்கும் முறையை வகுத்துள்ளார்.
தவல் வகுத்த இந்த தொழில்நுட்பத்தை இந்தியா, குவைத், அமெரிக்கா, இங்கிலாந்து, ஓமன், சிங்கப்பூர் என உலகின் பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாந்தி கரம்செட்: கர்நாடகாவைச் சேர்ந்த இவர், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பாட முறையை வகுத்து, சிறப்பு பயிற்சி மூலம் அவர்களை தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளார். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக பள்ளி நடத்தி வரும் இவர், அக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு எளிய முறையில் கணிதம், கம்யூட்டர் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறார். மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களின் தனித்திறன், சமூகத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் திறன்,தன்னம்பிக்கை போன்ற திறன்களை அளித்து வருகிறார்.
ரஷ்மி கதுரியா: டில்லியைச் சேர்ந்த கணித ஆசிரியரான இவர், பாட புத்தகத்தில் இருக்கும் கணக்குகளை அப்படியே கற்றுக் கொடுக்காமல் அதனை எளிய முறையில் கற்றுக் கொள்ளும் வழிமுறைகளை வடிவமைத்துள்ளார்.
கணக்குடன் வாழ்வியல் திறன்கள், சுயதொழில் திறன்கள், உலகத்தரத்திற்கு மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளும் திறன்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். எளிய முறையில் கணித முறைகளை கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தான் வடிவமைத்த முறைகளை ஆசிரியர்களுக்கும், பல்கலை., மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகிறார்.