சம்பளதாரர்களுக்கு நல்ல செய்தி பி.எப்., வட்டி 8.8 சதவீதமாக அதிகரிப்பு
'நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது,'' என, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக கட்டுப்பாட்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன், மத்திய அறங்காவலர் குழுமத்தின், 211வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பேசியதாவது:
ஆலோசனை தொழிற் சங்கத்தினர், தொழிலாளர்கள், அமைச்சகம் ஆகியோர் இணைந்து பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறித்து கலந்தாலோசனை நடத்தினோம். தற்போது, 34 ஆயிரத்து, 844 கோடி ரூபாய் மொத்த இருப்பு உள்ளது. இது, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களான, நான்கு கோடி பேருக்கு வழங்கப்பட வேண்டும்.
'வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை, 8.90 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்' என, கோரினர். அந்த அளவுக்கு வழங்கினால், நம்மிடம் வெறும், 285 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும்.
கடந்த ஆண்டு, 8.75 சதவீதம் வழங்கினோம். இந்த ஆண்டு சூழ்நிலைகளை ஆலோசித்து, 8.80 சதவீதம் வழங்க முடிவு செய்துள்ளோம். இது, ஏழாவது சம்பள கமிஷன், தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ள தொழில்துறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம், 2015 - -16ம் நிதிஆண்டிற்கு பொருந்தும்.
ரூ.௩௦ ஆயிரம் கோடிவரும் காலங்களில் சூழ்நிலைக்கும், கையிருப்புக்கும் ஏற்ப, வட்டி வீதத்தில் மாற்றம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும், தொழிலாளர்களுக்கு தரும் வட்டி வீதத்தை உயர்த்த வேண்டும் என்பதே என் விருப்பம். இதுவரை, 2.23 கோடி பேர், 'யு.ஏ.என்., - யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்' பெற்றுள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக கணக்கு மாறிய தொழிலாளர்கள் நிதி, நிலுவை தொகை, 30 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இன்று, புகார் ஆய்வு கண்காணிப்பு முறை, ஓய்வூதியம் பெறும் விண்ணப்பம் எளிமைபடுத்தியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துறை செயலர் சங்கர் அகர்வால், வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சமாரியா உள்ளிட்டோ பங்கேற்றனர்.