பெற்றோர், ஆசிரியர் சங்கதேர்தல்; கல்வி அதிகாரிக்கு உத்தரவு
அரசு பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தக் கோரிய மனுவை பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி, நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரைச் சேர்ந்த பூமிநாதன் தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் சங்க தேர்தல், ௨௦௧௦ல் நடந்தது. இதில், தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமிர்தகடேஸ்வரன் என்பவரின் மகன், ௨௦௧௩ல் பள்ளிப் படிப்பை முடித்து விட்டார்.
பெற்றோர் - ஆசிரியர் சங்க விதிகளின்படி, வருகைப்பதிவில் இருந்து பெயர் நீக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், சங்க நிர்வாகியாக தொடர முடியாது. கடந்த, ௨௦௧௦ல் தேர்வான நிர்வாகிகளின் பதவிக்காலம், ௨௦௧௩ல் முடிந்தது. இருந்தும், அவர்கள் இன்னும் பதவிகளில் நீடிக்கின்றனர்.
அதனால், பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மனு அளித்தோம்; அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, மனுதாரர் அளித்த மனுவை பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.