பி.எப் வட்டி உயர்வு; சிறுசேமிப்பு வட்டி குறைப்பு
நிகழ் நிதியாண்டுக்கான (2015-16) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்) வட்டி 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர்களிடமிருந்து பெறும் நிதியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தொழிலாளர்களுக்கு வட்டி வழங்கி வருகிறது.
இதன்படி நிகழ் நிதியாண்டுக்கான வட்டியை நிர்ணயம் செய்வது தொடர்பான நிதி தணிக்கை மற்றும் முதலீட்டுக் குழு கூட்டத்தில் தற்போதுள்ள 8.75 சதவீத வட்டியை 8.80 சதவீதமாக உயர்த்துவதற்கு பரிந்துரை செய்தது.
இப்பரிந்துரையை ஏற்று வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வட்டி விகிதத்தை 8.8. சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இதை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். இந்த வட்டி உயர்வு இடைக்கால வட்டி விகிதம் எனவும் இது மேலும் மாற்றியமைக்கப்படும் என்றார் அமைச்சர்.
சிறுசேமிப்பு வட்டி குறைப்பு
இந்நிலையில் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்துள்ளது.
ஓராண்டு, ஈராண்டு, மூன்று ஆண்டுகளுக்கான வைப்பு நிதிகள், கிஸான் விகாஸ் பத்திரம் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான தொடர் வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டிவிகிதங்களில் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பிபிஎப், தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.