கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்
பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழ் அல்லாத இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற, 11 மொழிகளை தாய்மொழியாக கொண்ட, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
2006ல், தமிழக அரசு அமல்படுத்திய அரசாணைப்படி, அனைத்து மொழி மாணவர்களும் தமிழை கட்டாய பாடமாக படிக்க வேண்டும். இதன்படி, 'தமிழ் படித்தவர்கள், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை கட்டாய தேர்வாக எழுத வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு, 'முறையாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; புத்தகங்கள் வழங்கப்படவில்லை' எனக்கூறி, பிறமொழி மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.தமிழக மொழி சிறுபான்மை பாதுகாப்பு பேரவை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதில், தமிழ் கட்டாய தேர்வு உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, பிறமொழி மாணவர்களுக்கான தேர்வுபட்டியலில் இருந்து, தமிழ் பாடத்தை நீக்கும் பணியை தேர்வுத்துறை அவசரமாக மேற்கொண்டது; ஆனால், அரசு அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.இதில், பெரும்பாலான மாணவர்கள் நிம்மதி அடைந்தாலும், இன்னொரு தரப்பில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, கடந்த காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில், தமிழில், 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தமிழ் பாடம் நீக்கப்படவில்லை. அதனால், பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வு இல்லை:
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: விண்ணப்பம் அளித்தமாணவர்களுக்கு மட்டும் விலக்கு என்கின்றனர். கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மாணவர்களுக்கு, இந்த பிரச்னை பற்றிய விழிப்புணர்வு இல்லை; பள்ளி தலைமை ஆசிரியர்களும் வழி நடத்தவில்லை. பள்ளிகளில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாததால் மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை.சமீபத்தில் வெள்ள பாதிப்பால் தங்கள் மாநிலத்துக்கு சென்று திரும்பிய பலருக்கு, இந்த பிரச்னை பற்றியே தெரியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.''மாணவர்களிடம் விண்ணப்பத்தை எதிர்பார்க்காமல், அதிகாரிகள் பாடத்தை மாற்ற வேண்டும். அப்பாவி ஏழை மாணவர்கள் பாதிக்கும்படி நடக்கக் கூடாது. இதுகுறித்து, பிறமொழி மாணவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், 98843 13344 எண்ணில், என்னை தொடர்பு கொள்ளலாம். சி.எம்.கே.ரெட்டி,தலைவர் மொழி சிறுபான்மை பாதுகாப்பு பேரவை
தமிழில் தடுமாறும் திருவள்ளூர்:
தமிழக பொதுத் தேர்வுகளில், 10 ஆண்டுகளாக, திருவள்ளூர் மாவட்டத்தில் தான், தமிழ் பாடத்தில் அதிகம் பேர் தோல்வியடைந்து, தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், இங்கு தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் அதிகம் உள்ளதே. இவர்களின் பேச்சு வழக்கு தெலுங்கு என்றாலும் படிப்பில் தமிழும் படித்தனர். பல பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல்,தேர்ச்சி பாதிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த நிலை மற்ற மாவட்ட மாணவர்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என,பெற்றோர் அச்சம்அடைந்துள்ளனர்.