தேர்வு அறையில் செய்ய வேண்டியது (தேர்வு காலங்கள்)
"பொதுத் தேர்வு குறித்து மாணவர் களின் மனதில் உள்ள பயத்தை போக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. கடைசி நேரத்தில்கூட இதுதொடர்பான ஆலோசனையை அவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டும்," என மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.
தேர்வு பயத்தை எவ்வாறு நீக்குவது, தேர்வு அறையில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அவர் கூறும் டிப்ஸ்கள்.... பள்ளி மாணவர் களின் அடுத்தகட்ட வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும் முக்கிய தேர்வு இது. இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான் உயர்கல்வியும், அவர்களின் எதிர்காலமும் அமையும். வினாத்தாள் அமைப்பை (புளுபிரிண்ட்) மாணவர்கள் நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும் என்று மாணவர்கள்
உறுதியாக நம்ப வேண்டும். இந்த உறுதி, மனதளவில் உள்ள தேர்வு பயத்தை நீக்கிவிடும். இன்னும் சில நாட்களே உள்ள நிலையிலும், நேரத்தை வீணடிக்காமல் படித்தால், சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட எளிதில் வெற்றி பெற முடியும்.
இந்தாண்டு ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே விடுப்பு விடப்பட்டு, திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்வு அட்டவணை மாணவர்களுக்கு பயன் அளிக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற ஆர்வத்தையும், நேர்மறை சிந்தனை சூழலையும் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.
கடைசி நேரத்தில் தேர்வு அறைக்குள் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காலை 9.45 மணிக்கு அறைக்குள் செல்ல வேண்டும். எழுது பொருட்களை தவிர அலைபேசி, கால்குலேட்டர் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. அதற்கு என ஒதுக்கப்பட்ட தனி அறையில் வைத்துவிட வேண்டும்.
காலை 10.00 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10.10 மணி வரை வினாத்தாளை படிக்க அவகாசம் வழங்கப்படும். 10.15க்குள் புகைப்படங்களுடன் கூடிய 'டாப் சீட்'கள் மற்றும் விடைத்தாள் வழங்கப்பட்டு தேர்வு துவங்கும். மதியம் 1.15 மணிக்குள் முடிக்க வேண்டும்.
கேட்கப்பட்ட ஒவ்வொரு வினாக்கள் பகுதிக்கும், உரிய நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை அளித்து, யோசித்து எழுதும் வினாக்களுக்கு, பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கி எழுத திட்டமிடலாம்.குறிப்பாக விடைத்தாளில் அடித்தல் திருத்தல் இருக்க கூடாது. முழுமையாக விடை எழுதிவிட்டு அதை அடிக்க கூடாது. இம்முறை இது தீவிரமாக கண்காணிக்கப்படும். நல்ல மனநிலையில் சென்று தேர்வை எதிர்கொள்ளும் சூழலை ஒவ்வொரு மாணவர்களும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.