பி.எஃப். பணத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளலாம்
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) தொடர்பான வசதிகளை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி மூலம் பி.எஃப். பணத்தைப் பெறும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்) உயரதிகாரி ஒருவர், தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
குர்கான், துவாரகை, செகந்தராபாத் ஆகிய இடங்களில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பான, மத்திய தகவல் மையங்கள் விரைவில் அமையவுள்ளன.
இந்தத் தகவல் மையங்களுடன், நாடு முழுவதும் உள்ள 123 பி.எஃப். அலுவலகங்களும் இணைக்கப்படும்.
இதற்கான கணிப்பொறி பரிமாற்றகங்கள் நிறுவும் பணி, வரும் மே மாதம் நிறைவடையும். பின்னர் அதுதொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பி.எஃப். பணத்தை இணையவழியில் பெறும் வசதி ஆகஸ்ட் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும்.
இதன்படி, பிஎஃப் பணத்தை பெறுவதற்கு வங்கிக் கணக்குகள், ஆதார் அட்டை எண், பான் அட்டை எண் ஆகிய விவரங்களை இணைத்து, வாடிக்கையாளர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர், அவர்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பி.எஃப். தொகை உரியவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நாடு முழுவதும் தற்போது 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.