'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி.
சட்டசபை தேர்தல் பணி இருக்கிறது எனக்கூறி, பொதுத்தேர்வு பணிக்கு, 'டிமிக்கி' கொடுத்த ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.
முதலில், தேர்வு பணியை பார்க்கும்படி உத்தரவிட்டு உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, 10 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை தேர்வுத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்வு மையம் அமைத்தல், தேர்வு கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், முதன்மை விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்புதல் என, பல பணிகள் நடந்து வருகின்றன. இதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகளிடம், முதன்மை கல்வி அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர். இதுபற்றி, தேர்வுத் துறை இணை இயக்குனர்கள் அமுதவல்லி மற்றும் உமா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்வுத் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பல ஆசிரியர்கள், பொதுத்தேர்வு பணியை பார்க்காமல், 'ஓபி' அடிக்கின்றனர். கடந்த வாரம் முழுவதும் போராட்டம் எனக்கூறி, பள்ளிக்கு முழுக்கும் போட்டு விட்டனர். தற்போது, தாமதமாக பணிக்கு வந்து விட்டு, தேர்வு பணிகளை பார்க்காமல், சட்டசபை தேர்தல் பணி இருப்பதாக கூறுகின்றனர். பெரும்பாலும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தான் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் மட்டுமே, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியிலும், வாக்காளர் ஆய்வு நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். எனவே, தேர்வு பணி முடங்கி விடாமல் தடுக்க, சட்டசபை தேர்தல் பணிகளை தள்ளி வைக்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.