தப்பியது செல்வமகள் திட்டம்... சிறுசேமிப்பு திட்டத்துக்கு வட்டி குறைப்பு...

தப்பியது செல்வமகள் திட்டம்... சிறுசேமிப்பு திட்டத்துக்கு வட்டி குறைப்பு... நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றம்!
அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை திடீரென குறைத்துள்ளது மத்திய அரசு. ஆனால், ‘செல்வமகள்’ திட்டம் உள்ளிட்ட நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை. வங்கி முதலீட்டுத்
திட்டங்களை விட அதிக வட்டி கிடைப்பதால், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களை நாடி வந்த பொதுமக்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


அஞ்சலகங்களில் ஓராண்டு, இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டுகளில் முதிர்ச்சி அடையத்தக்க சேமிப்பு திட்டங்கள், கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் 5 ஆண்டுகால தொடர் வைப்பு திட்டம் போன்றவற்றுக்கான வட்டி விகிதம், இதே கால அளவு கொண்ட வங்கி முதலீட்டு திட்டங்களுக்கான வட்டியை விட 0.25 சதவீதம் அதிகமாக உள்ளது. அதாவது, மேற்கண்ட முதலீட்டு திட்டங்களுக்கான வட்டி விகிதம், 8.4 சதவீதமாக உள்ளது. 5 ஆண்டு கால தொடர் வைப்பு திட்டத்தை பொறுத்தவரை, 100 மாத காலத்தில் முதலீடு இரு மடங்காகும் நிலை உள்ளது. வங்கி முதலீட்டுத் திட்டங்களை விட அதிக வட்டி கிடைப்பதால், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களையே பொதுமக்கள் நாடி வந்தனர்.

இந்நிலையில், சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை சந்தை நிலவரத்துடன் இணைக்கும் நோக்கத்தில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கு அதிகமாக கிடைத்து வந்த 0.25 சதவீத வட்டியை, ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து விலக்கிக்கொள்வதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன்மூலம், அஞ்சலக குறுகிய கால சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைகிறது. அத்துடன், காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை, வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கான வட்டியும், அதற்கு முந்தைய மாதத்தின் 15ம் தேதி முடிவு செய்யப்படும். இந்த நடவடிக்கையால், ஒரே மாதிரியான வட்டி நடைமுறைக்கு பொருளாதாரம் இட்டுச் செல்லப்படும் என்றும், இது குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் மாத சம்பளக்காரர்களுக்கு பலனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தப்பிய செல்வமகள் சேமிப்பு திட்டம்... அதே சமயத்தில், நீண்டகால முதலீட்டுத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெண் குழந்தைகள் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கும் ‘செல்வமகள்’ திட்டம், கடந்த ஆண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்திட்டத்துக்கு 9.2 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொது வைப்பு நிதிக்கான (பி.பி.எப்.) வட்டி 8.7 சதவீதமாகவும், மாதாந்திர வருவாய் திட்டத்துக்கான வட்டி 8.4 சதவீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. 

அதுபோல், 5 ஆண்டுகால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் போன்ற நீண்டகால சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியிலும் மாற்றம் செய்யப்படவில்லை. இவையெல்லாம் சமூக பாதுகாப்பு திட்டங்கள் என்பதால், இவற்றின் வட்டி விகிதத்தில் மத்திய அரசு குறுக்கிடவில்லை என்று தெரிகிறது. மேலும், பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை, முதிர்வடையும் முன்பே முடித்துக்கொண்டு பணம் பெறும் சலுகையையும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கடுமையான வியாதி, குழந்தைகளின் உயர் கல்வி போன்ற நியாயமான காரணங்களுக்காக கணக்கை முன்கூட்டியே முடிக்கலாம். ஆனால், இதற்கு அபராதமாக ஒரு சதவீத வட்டி கழித்துக் கொள்ளப்படும். ஆரம்பித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த கணக்குகளுக்கே இச்சலுகையை பெற முடியும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank