மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை
மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எல்.டி.சி., விண்ணப்ப நடைமுறை சிக்கலாக இருப்பதாக, மத்திய அரசு ஊழியர்கள் கூறி வந்தனர். விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனக்கூறி, எல்.டி.சி., நிராகரிக்கவும் படுகிறது. இதையடுத்து, இதற்கான நெறிமுறைகளை, மத்திய அரசு எளிமை படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்கள், சொந்த ஊருக்கோ, வேறு இடங்களுக்கோ செல்லும் போது, எல்.டி.சி.,யின் கீழ், விடுமுறை பயணம் செய்ததற்கான டிக்கெட் செலவை பெறலாம். அதனை, அந்த மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும்.அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கிடைக்கும் தகவல்கள், புகைப்படங்களை, சமூக வளைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம். அலுவலகம் மற்றும் ஊழியர் அமைப்புகளின் பத்திரிகைகள், இணையதளங்களிலும், வெளியிடலாம்.
முந்தைய விதிமுறைப்படி, விடுமுறை எடுக்கும் ஊழியர், உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது, விடுமுறை பொறுப்பாளரிடம் கடிதம் கொடுத்தாலே போதுமானது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.