‘பேஸ் புக்’ இலவச அடிப்படை சேவை இனி இல்லை ‘டிராய்’ கட்டுப்பாடு காரணமாக அதிரடி
புதுடெல்லி,
‘டிராய்’ விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ‘பேஸ் புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் இலவச அடிப்படை சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
‘டிராய்’ என்னும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 8–ந் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதில், இணையதளத்தில் சேவையை பொறுத்து, மாறுபட்ட கட்டணம்
வசூலிப்பதற்கும், இலவச சேவைகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேவை வழங்கும் நிறுவனம், பிற நிறுவனங்களுடன், நபர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணைய தள சம நிலை சேவையை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளதாக ‘டிராய்’ கூறியது. கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
பாதிப்பு
‘டிராய்’ விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்துகிற தகவல்களுக்கு, எந்த இணையதளமாக இருந்தாலும், எந்த செயலியை பயன்படுத்தினாலும், சம கட்டணம் வசூலிக்கிற நிலை உருவாகி உள்ளது.
அத்துடன் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘பேஸ் புக்’ உள்ளிட்ட சில அடிப்படை சேவைகளை இலவசமாக வழங்கி வந்த ‘ப்ரி பேசிக்ஸ்’ திட்டம் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவானது.
அதுமட்டுமின்றி ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘ஜீரோ ரேட்டிங் பிளான்’ பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த பிளானில் சேருகிற பொதுமக்கள், இணைய தளங்களை இலவசமாக பார்வையிட்டு வந்தனர். அதுவும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உருவாகி இருக்கிறது.
திட்டம் மூடல்
‘டிராய்’ விதித்துள்ள இந்த தடை ஏமாற்றம் அளிப்பதாக ‘பேஸ் புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘பேஸ் புக்’ சமூக வலைத்தள நிறுவனம் தனது இலவச அடிப்படை சேவையை மூடி விடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இ–மெயிலில், ‘‘இந்தியாவில் உள்ள மக்களுக்கு ‘ப்ரி பேசிக்ஸ்’ திட்டம் இனி கிடைக்காது’’ என குறிப்பிட்டுள்ளார்.
‘பேஸ் புக்’ நிறுவனம், இன்டர்நெட் டாட் ஆர்க் என்ற பெயரில் 17 நாடுகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச அடிப்படை சேவையை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.