மாணவர்களுக்கு அறிவியல் போட்டி வென்றால் இலவச ரஷ்யா பயணம்
ராமேஸ்வரம்:அறிவியல் படைப்பு போட்டியில் வெல்லும் மாணவர்கள், ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இதுகுறித்து கலாம் பேரன் சலீம், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் இயக்குனர் ஸ்ரீமதிகேசன் கூறியதாவது:
'அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன்', 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' இணைந்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அறிவியல் போட்டி நடத்துகிறது. 'இளம் விஞ்ஞானிகள் 2016' , 'நமக்கு நாமே இந்தியா 2016' திட்டம் சார்பில் போட்டி நடைபெற உள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளை மார்ச் 7 முதல் மே 30 வரை www.spacekidzindia.com' என்ற இணையதளத்தில் மாணவர்கள் அனுப்பவேண்டும்.
இப்போட்டியில் இந்திய முழுவதும் உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படும் அறிவியல் படைப்புகள் ஜூலை 18ல் சென்னையில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் வைக்கப்படும். இதில் சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்தும்
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தலா இரண்டுபேருக்கு, அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஜூலை 27ல் ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசுபெறும் இரு மாணவர்கள், ரஷ்யாவில் உள்ள ஸ்டார் சிட்டி விண்வெளி ஆய்வு மையத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவர், என்றனர்.