அரசு ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை,: பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்தனர். மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் பல சலுகைகளை அறிவித்தார். 'இது, வாக்குறுதிகளாகவே உள்ளன; அரசாணைகளாக தரவில்லை' எனக்கூறி, அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'கை தொடர்ந்தனர்.
நேற்று, போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக, அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: நாங்கள், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினோம். முதல்வர் அறிவிப்பில், 14 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டசபைத் தேர்தல் பணி, போலியோ முகாம், அரசு பொதுத்தேர்வுகளையும் கருத்தில் கொண்டு, காலவரையற்ற, 'ஸ்டிரைக்' ஒத்தி வைக்கப்படுகிறது. 'அறிவிப்புக்களுக்கான அரசாணைகளை தர வேண்டும்; புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக, வல்லுனர் குழுவை அறிவிக்க வேண்டும்' என, அரசை வலியுறுத்தி உள்ளோம். அறிவிப்புகளுக்கு அரசு செயல் வடிவம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லாவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 'வாபஸ்'கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், நான்கு நாட்களாக உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வந்தது. இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிப்புக்களை வெளியிட்டார். 'இது, திருப்தி அளிக்கிறது; போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி' என, தெரிவித்துள்ள மாற்றுத்திறனாளி அமைப்புக்கள், போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளன.