அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு
கடந்த 19–ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர்ஜெயலலிதா, பேரவை விதி 110–ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.30–ல் இருந்து ரூ.60 என்று உயர்த்தப்படுகிறது.
அதுபோல அந்த ஊழியர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும் தொகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில்,நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பு 1.2.16 அன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், அதே தேதியில் மற்றொரு அறிவிப்பையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர் ஆகியோருக்கு குழு காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது.
ஊழியரின் மரணத்தை அடுத்து, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகையும் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.இதுதொடர்பாக கே.சண்முகம் பிறப்பித்துள்ள மற்றொரு அரசாணையில், இந்த தொகையை வாரிசுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நேரடியாக வழங்கும். பிப்ரவரி 1–ந் தேதியில்இருந்து இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.