மத்திய அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்ப தேர்வு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பல்வேறு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்த உள்ளது. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
மத்திய பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) வெவ்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வை நடத்த இருக்கிறது. இதற்குபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி மார்ச் 10
முதல்கட்ட தேர்வு மே 8, 22-ம் தேதிகளில் பல்வேறு தொகுப்புகளாக நடைபெறும். அதில் வெற்றிபெறுவோருக்கு 2-வது கட்ட தேர்வு ஆகஸ்ட் 13, 14-ம் தேதிகளில் நடத்தப்படும். தேர்வுக்கு ஆன்லைன் மூலம் (http://sscregistration.nic.in) மார்ச் மாதம் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பணி விவரங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முறை, பாடத்திட்டம், தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை http://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். மேலும், தேர்வு தொடர்பானவிவரங்கள் பிப்ரவரி 13-19-ம் தேதியிட்ட ‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த தேர்வு மூலம் மத்திய தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, வெவ்வேறு அமைச்சகங்களில் உதவியாளர், வருமானவரி ஆய்வாளர், மத்திய போதைப் பொருள் தடுப்புத்துறை ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், துணை அமலாக்க அலுவலர், சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை மற்றும் மத்திய போதைப் பொருள் தடுப்புத்துறை உதவி ஆய்வாளர், கோட்ட கணக்கர், புள்ளியியல் ஆய்வாளர், உதவி தணிக்கை அலுவலர், தலைமை கணக்கு தணிக்கை அலுவலக துணை தணிக்கை அலுவலர், மத்திய நேரடி வாரியம் மற்றும் மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை உதவி வரி ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இவ்வாறு மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.