தேர்தல் பணிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய மனு தள்ளுடி

தேர்தல் பணிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி, சர்க்கரை, ஆஸ்துமா, இதய நோயால் அவதிப்படும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


      தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச் செயலர் எஸ்.சி.கிப்சன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 45,729 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் பணிக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி அலுவலர்கள், இரு போலீஸார் மற்றும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி நியமனம் செய்யப்படுகின்றனர். தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் போது உடல் ஊனமுற்ற ஆசிரியர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சர்க்கரை, ஆஸ்துமா, இதய நோயால் அவதிப்படும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

பெண் ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் இடம் அல்லது சொந்த ஊரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள வாக்குச்சாவடியிலும், ஆண் ஆசிரியர்களை 50 கி.மீ தொலைவில் உள்ள வாக்குச்சாவடியிலும் பணி நியமனம் செய்ய வேண்டும். கணவன், மனைவி இருவரும் வாக்குச்சாவடி அலுவலராக நியமனம் செய்யும் போது ஒரே வாக்குச்சாவடி அல்லது அருகருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் நியமனம் செய்ய வேண்டும். பணிபுரிய வேண்டிய வாக்குச்சாவடி குறித்து தற்போது 36 மணி நேரத்துக்கு முன்பு ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 4 நாட்களுக்கு முன்பே பணியிடத்தை தெரிவித்தால், வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்தை கண்டறிந்து பணிக்கு செல்வது எளிதாக இருக்கும்.
போக்குவரத்து வசதி இல்லாத வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கு தேர்தல் ஆணையமே போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். வாக்குச்சாவடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பட வசதி, மின்விசிறி மற்றும் உணவு வசதிகள் வழங்க வேண்டும். பெண் ஊழியர்களை மாலை 6.30 மணிக்கு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். தேர்தல் பணிக்கான சிறப்பூதியத்தை ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். தேர்தல் பணி தவிர்த்து பூத் சிலிப், வாக்காளர் பட்டியல் திருத்தம், சிறப்பு முகாம் பணிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக விடுவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையருக்கு 29.12.2015ல் மனு அனுப்பினேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின், ‘மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார். ஆனால், இதுபோன்ற கோரிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தான் மனு அனுப்ப வேண்டும். அவ்வாறு மனு அனுப்பப்படாத நிலையில் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank