பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசுஉதவித் தொகை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
, ''மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பண்பாட்டு ஆதாரங்கள் மற்றும் பயிற்சி மையம், கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான புதிய பிரிவுகளில் ஆராய்ச்சி அடிப்படையிலான திட்டங்களை மேற்கொள்ள இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆய்வு உதவித்தொகைகளை வழங்குகிறது.
இளநிலை பட்டதாரி ஆய்வு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரமும், அதேபோல், முதுநிலை பட்டதாரி ஆய்வு உதவித்தொகை திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.2014-15, 2015-16-ம் ஆண்டுகளுக்கான இளநிலை, முதுகலை பிரிவுகளில் 800 பேருக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 11-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை www.indiaculture.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.