ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பு: நமக்கு என்ன பயன்?

நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது.



கிட்டத்தட்ட திறப்பதற்கே வாய்ப்பில்லாத பிரபஞ்சத்தின் ஜன்னல் கதவுகளை விஞ்ஞானிகள் திறந்திருக்கிறார்கள். வரலாறு நெடுக இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குவதற்கான விழிகளை நாம் புதிதாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அப்போதெல்லாம் நம்மைப் பற்றியும், நாம் வாழும் இவ்வுலகைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் எண்ணங்கள் அடியோடு மாறிக்கொண்டேவருகின்றன.



வியாழன் கோளை நோக்கி 1609-ல் கலிலியோ தனது தொலைநோக்கியைத் திருப்பியபோது அந்த ராட்சதக் கோளை அதன் நிலவுகள் சுற்றிக்கொண்டிருப்பதை அவர் கண்டார். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பூமியைச் சுற்றியே சுழல்கின்றன என்பதுதான் அப்போது வரை இருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கியது கலிலியோவின் கண்டுபிடிப்பு. அதேபோல், விண்பொருட்களிலிருந்து வெளிப்பட்ட மின்காந்த அலைகளை 1964-ல் அர்னோ பென்ஸியாஸும் ராபர்ட் வில்சனும் கண்டறிந்தபோது இந்தப் பிரபஞ்சமே ஒரு பெருவெடிப்பில் தோன்றியது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். ஒரு நிறையானது அது இருக்கும் இடத்தை (அண்டவெளி) வளைக்கிறது என்பது அந்தக் கோட்பாட்டின் மையம். ஒவ்வொரு தடவை நாம் கையை அசைக்கும்போதும் நம்மைச் சுற்றிலும் இருக்கும் அண்டவெளிக் கம்பளத்தில் அசைவுகள் உருவாகி ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன. அதாவது, ஒரு குளத்தில் கல்லை எறிந்தால் அலைகள் உருவாகிக் கரையை நோக்கிச் செல்லுமல்லவா, அதுபோல.

தனது பொதுச் சார்பியல் கோட்பாட்டைக் கொண்டு ஐன்ஸ்டைன் விளக்கியது இதைத்தான். ஈர்ப்பலைகள் அண்டவெளியில் பரவிச் செல்லும்போது பொருட்களுக்கிடையேயுள்ள தொலைவுகளை குறுக்கவோ அதிகரிக்கவே செய்கின்றன. தொலைவிலுள்ள இரண்டு கருந்துகளைகள் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டு பின், பிணைந்ததால் வெளிப்பட்ட ஈர்ப்பலைகளை, அவற்றின் மேற்கண்ட இயல்பை வைத்து லிகோ ஆய்வகத்தில் கண்டறிந்தார்கள்.

மோதிப் பிணைந்துகொண்ட இந்த இரு கருந்துளைகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு கருந்துளை சூரியனை விட 36 மடங்கு நிறை கொண்டது; இன்னொன்று 29 மடங்கு நிறை கொண்டது. இரண்டும் மோதிப் பிணைந்தபோது உருவான கருந்துளையின் நிறை, சூரியனை விட 62 மடங்கு அதிகம். கணக்கு ஏதோ உதைப்பதுபோல் இருக்கிறதா? உங்கள் ஊகம் சரிதான். மீதமுள்ள மூன்று மடங்கு சூரிய நிறை எங்கே போனது? ஈர்ப்பலைகள் வடிவில் பரிசுத்தமான ஆற்றலாக மாறிவிட்டது அந்த நிறை.

மக்கள் வழக்கமாக ஒரு கேள்வி கேட்பார்கள்: இதுபோன்ற அறிவியலால் என்ன பயன்? வேகமாகச் செல்லும் கார்களையோ அதிநவீனச் சமயலறைக் கருவிகளையோ இதன் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? பிக்காஸோவின் ஓவியத்தையோ பீத்தோவனின் இசையையோ பற்றி நாம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. மனிதப் படைப்பாற்றலின் இதுபோன்ற உச்சங்களால் இந்தப் பிரபஞ்சத்தில் நமது இடத்தைப் பற்றிய நமது பார்வைக் கோணம் மாறக் கூடும். ஓவியம், இசை, இலக்கியம் போன்றவற்றைப் போல அறிவியலுக்கும் நம்மை பரவசப்படுத்தும், வியப்பூட்டும், அதிசயிக்க வைக்கும் சக்தி உண்டு. அறிவியலின் இந்தத் தன்மைதான் அதாவது அதன் கலாச்சாரப் பங்களிப்புதான் அதன் மிக முக்கியமான அம்சம்.

இதுபோன்ற இயற்கையின் அதிசயங்களை உற்றுநோக்கிச் செய்யும் இதுபோன்ற வியப்பூட்டும் பரிசோதனைகள் மூலமாக இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி மேலும் என்னென்ன நாம் அறிய முயலும்? இந்த ஈர்ப்பலைகளைக் கண்டறிவதற்காக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் ஆய்வகங்களால் கருந்துளைகளின் விசித்திர இயல்புகளையெல்லாம் கண்டறியக் கூடும். விண்மீன் மண்டலங்கள், விண்மீன்கள், ஈர்ப்பு விசை போன்றவற்றின் பரிணாமத்தைப் பற்றிக் கண்டறிவது அவற்றுக்கு சாத்தியமாகலாம். இப்படியாக, பெருவெடிப்பின்போது வெளிப்பட்ட ஈர்ப்பு அலைகளையும் நாம் கண்டறியக் கூடும். அப்படிக் கண்டறியும்போது, இயற்பியலில் தற்போது நமக்கிருக்கும் அறிவின் எல்லை மேலும் விரிவடையும்.

கருந்துளைகள் என்பவை இந்தப் பிரபஞ்சத்தின் புறவாசல் கதவைப் போன்றவை. சுற்றியுள்ள பிரபஞ்சத்திலிருந்து கருந்துளைகளுக்குள் செல்லக் கூடிய எதுவும் திரும்பி வர முடியாது. அந்தக் கருந்துளைகளின் விளிம்பில் ‘நிகழ்வு எல்லை’ என்ற ஒரு பகுதி இருக்கிறது. அதன் அருகிலிருந்து ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன. அந்தப் பகுதிக்கு அருகே காலம் மிகவும் மெதுவான வேகம் கொண்டதாக ஆகிறது. சமீபத்தில் வெளியான ‘இண்டெர்ஸ்டெல்லார்’ என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்தவர்களுக்கு இது புரிந்திருக்கும். இந்த நிகழ்வு எல்லைக்கு அருகே நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டறிவதன் மூலம், அல்லது தொடக்க காலப் பிரபஞ்சத்திலிருந்து வெளிப்பட்ட ஈர்ப்பு அலைகளை உற்றுநோக்குவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றியும், ஒருவேளை இன்னும் பல பிரபஞ்சங்கள் இருக்கக் கூடுமென்றால் அவற்றைப் பற்றியும் அறிந்துகொள்வது நமக்கு சாத்தியமாகலாம்.

‘நாம் எங்கிருந்து வந்தோம்? இங்கு எப்படி வந்தோம்?’ என்ற கேள்விகள் எழாத குழந்தைகளே இல்லை எனலாம். இந்தப் பிரபஞ்சத்தைத் துழாவிப் பார்க்க லிகோ போன்ற விண்ணோக்க ஆய்வகங்களை உருவாக்குவதன் மூலம் மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல நாம் முயலலாம் என்பது மனித குலத்தின் இடையறாத ஆர்வத்துக்கும் அறிவுக்கூர்மைக்கும் ஒரு சான்று. நமது மனித குலத்தைப் பற்றி நாம் பெருமிதத்துடன் கொண்டாட அடிப்படையே இந்த ஆர்வமும் அறிவுக் கூர்மையும்தானே

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)