தேர்வர்கள் வழக்கு: 'செட்' தேர்வு நடப்பதில் சிக்கல்
கல்லுாரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வான, 'செட்' தேர்வை நடத்துவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகளில் குளறுபடி உள்ளதாகக் கூறி, தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு, தேசிய அளவில், 'நெட்' அல்லது மாநில அளவில், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நெட் தேர்வு, மத்திய அரசு சார்பில், ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. ஆனால், செட் தேர்வை, மாநில அரசு, தன் விருப்பத்துக்கு ஏற்ப நடத்துகிறது.
தமிழகத்தில், நான்கு ஆண்டுக்கு பின், பிப்., 21ல், செட் தேர்வு நடக்க உள்ளது. இந்த ஆண்டு தேர்வை, அன்னை தெரசா பல்கலை நடத்துகிறது. அப்பல்கலையில், துணைவேந்தர் இல்லாத நிலையில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையிலான குழு, தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், இந்த அறிவிக்கை மற்றும் நடைமுறைகளில் குளறுபடிகள் உள்ளதாக, செட் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு மனு அனுப்பினர்; ஆனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், செட் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கோவையைச் சேர்ந்த முருகானந்தம் ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், சில தேர்வர்களும் வழக்கு தொடர உள்ளனர்.
இது குறித்து, 'நெட், செட்' சங்க ஆலோசகர் சுவாமிநாதன் கூறும் போது, ''தேர்வு அறிவிப்பில் துவக்கம் முதலே குழப்பம் உள்ளது; அதை சரி செய்திருந்தால், வழக்கு வரை பிரச்னை சென்று இருக்காது. ஆனால், அரசின் தவறான அணுகுமுறையால் தகுதித் தேர்வுக்கு கூட, தேர்வர்கள் வழக்கு தொடரும் நிலை உள்ளது,'' என்றார்.இதனால், செட் தேர்வு நடப்பதில் சிக்கல் வரும் சூழல் உருவாகியுள்ளது.