ரயில் முன்பதிவில் காத்திருப்போர் பட்டியலை அறிந்துகொள்ள உதவும் செயலி அறிமுகம்!
ரயில் நிலையங்கள் வாரியாக காத்திருப்போர் பட்டியலை தெரிந்துகொண்டு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியாக செல்லிடப்பேசி செயலியை பொறியியல் மாணவர்கள் இரண்டு பேர் இணைந்து வடிமைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன (ஐஐடி) மாணவர் ருணால் ஜாஜும், ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கல்வி நிறுவன (என்ஐடி) மாணவர் சுபாம் பால்தவாவும் இணைந்து "டிக்கெட் ஜுகாட்' என்ற பெயரில் இந்தச் செயலியை வடிமைத்துள்ளனர்.
இதுகுறித்து ருணால் ஜாஜு, பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஒரு ஊரிலிருந்து புறப்படும் ரயில்களில் குறிப்பிட்ட இருக்கைகளை பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் ஒதுக்கீடு செய்திருக்கும். உதாரணத்துக்கு, நாம் ஒரு ஊரிலிருந்து செல்வதற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முயலும்போது, காத்திருப்போர் பட்டியல் வர வாய்ப்புள்ளது.
அதேநேரம், அதற்கு முந்தைய ரயில் நிலையத்திலிருந்து நாம் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில், அங்கு அதிக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கலாம்.
அவ்வாறு முன்பதிவு செய்துவிட்டு, நாம் மற்றொரு ரயில் நிலையத்தில் இருந்தும்கூட அந்த ரயிலில் ஏறினால் நமக்கான இருக்கை காலியாக இருக்கும்.எந்தெந்த ரயில் நிலையங்களில் எத்தனை இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதை நடைமுறையில் காண்பது சற்று சிரமம்.
ஆனால், நாங்கள் வடிவமைத்த செயலியைப் பயன்படுத்தி இதைக் காண முடியும். இந்தச் செயலியை ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றார் ருணால் ஜாஜு.