அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்-DINAMALAR

தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நீடித்து வரும் நிலையில், மேலும் பல சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இன்று முதல், அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள தால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வருகிறது. மூத்த அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியும், தீர்வு கிடைக்காததால், பிப்., 12ல், தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டது; இதில், அரசு ஊழியர்கள், 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.தொடர் போராட்டத்தால், வருவாய்த்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. சத்துணவு வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு, மாற்றுப் பணியாளர்கள் நியமித்து, நிலைமை சமாளிக்கப்படுகிறது. தலைமைச் செயலக சங்கம், அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நீதித்துறை ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும், போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால், போராட்டம் மேலும் தீவிரமாகிறது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டம், நாளை துவங்குகிறது. இதில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, பல அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிப்புகள் வெளியானால், போராட்டம் முடிவுக்கு வரும்.

இது குறித்து, அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர, அரசு ஆர்வம் காட்டவில்லை. எனவே, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம். இன்று முதல், மாவட்டங்கள் தோறும் தினமும் மறியல் நடக்கும். இதுவரை, போராட்டத்தில் இணையாத பல சங்கங்களும் ஆதரவு அளித்து வருகின்றன.போராட்டம் முறியடிப்பு என்ற அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்காது; இன்னும் வேகம் பெறும். கோரிக்கைகளை ஏற்று, அரசாணைகளை தந்தால் மட்டுமே,ஸ்டிரைக் கைவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், மூத்த அமைச்சர்கள் நடத்திய பேச்சு திருப்திகரமாக இருந்தது. கோரிக்கைகளை முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று, விரைவில் அரசாணை பிறப்பிப்பதாக உறுதி அளித்தனர். அரசியல் சார்புடைய, ஒரு சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது; அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், அரசியல் கட்சி ஒன்று போராட்டத்தை துாண்டிவிட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த ஊழியர்களின் பிரதிபலிப்பு அல்ல.
ஆர்.சண்முகராஜன் மாநில தலைவர், அரசு அலுவலர் ஒன்றியம்
பள்ளிகள் இயங்குமா?
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சார்ந்த, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இன்று போராட்டத்தை துவக்குகிறது. இதனால், கிராமங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை வகுப்புகள் பாதிக்கப்படும். 'ஜாக்டோ' கூட்டுக் குழுவில் உள்ள இந்த சங்கம், தனியாக போராட்டம் அறிவித்துள்ளதால், ஜாக்டோவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 'பட்ஜெட்டில் கோரிக்கை ஏற்காவிட்டால், நாளை முதல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமும், போராட்டத்தில் பங்கேற்கும்' என, அந்த அமைப்பின் தலைவர், கே.பி.ஓ., சுரேஷ்அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வுக்கு சிக்கல் :
மார்ச் 4ல், பிளஸ் 2; மார்ச் 15ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பால், தேர்வு பணிகள் பாதிக்கும். இது குறித்து, ஜாக்டோ அமைப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜ் கூறுகையில், ''தற்போது நடக்கும் செய்முறைத் தேர்வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாளை, அரசிடம் இருந்து நல்ல அறிவிப்பு வராவிட்டால், ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடி போராட்டத்தை அறிவிக்கும்; தேர்வு பணிகள் பாதிக்கும்,'' என்றார்.
டாக்டர்கள் திடீர் முடிவு:
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் அவசரக் குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு, ஆதரவு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சங்க மாநில செயலர் ராமநாதன் கூறுகையில், ''மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், ஸ்டிரைக்கில் பங்கேற்காமல், முழு ஆதரவு மட்டும் தருகிறோம். நாளை, அடையாள அட்டை அணிந்து பணி செய்வோம். பிப்., 19ல், சென்னையில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம்,'' என்றார்.

உடைந்தது சத்துணவு கூட்டமைப்பு:
காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்த, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் வரத ராஜன் கூறுகையில், ''மறியலின் போது, சில சங்கங்கள், மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டு சேகரித்ததால், கூட்டமைப்பில் இருந்து, நான்கு சங்கங்கள் விலகிவிட்டன. போராட்டத்தை கைவிடவும், இடைக்கால பட்ஜெட்டில், சலுகைகளை அறிவிக்காவிட்டால் மீண்டும் போராடவும் முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)