தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்காக 869 வாக்குசாவடி மையங்களில் 2114 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் என மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக துறை அதிகாரிகளிடம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்பும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோரப்பட்டிருந்தது.
இதில் இது வரை 10 ஆயிரம் ஊழியர்களின் பெயர் பட்டியல் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பபட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஊழியர்களின் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.மேலும் இது வரை அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலில் தேர்தல் பணியாற்ற உள்ள ஊழியரின் வாக்காளர் அடையாள அட்டை எண் பெரும்பாலான ஊழியர்கள் குறிப்பிடாமல் உள்ளதால் வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிடாதவர்கள் மீண்டும் புதிய பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.