இந்திய வனப்பணிகள் தேர்வு முடிவு வெளியீடு
இந்திய வனப்பணிகள் தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தில் இருந்து 10 பேர் தேர்வு, தமிழக அளவில் கோவை மாணவன் முதலிடம்
சென்னை: இந்திய வனப்பணிகள் தேர்வு முடிவு நேற்றிரவு வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அளவில் கோவை மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்
படும் இந்திய வன பணிக்கான முதல்நிலை தேர்வு கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த நவம்பரில் நடத்தப்பட்டது. முதன்மை தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து 10 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதலிடத்தை பிரதாப் சிங், இரண்டாவது இடம் அபிலஷா சிங், முன்றாவது இடம் சோலாங்கே சுமந்த் சுபாஷ் ராவ் ஆகியோர் பெற்றுள்ளனர். தமிழக அளவில் கோவையை சேர்ந்த மாணவன் பரத் முதலிடம் பிடித்தார்.
இதுகுறித்து, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவன தலைவர் சங்கர் கூறியதாவது: இந்த ஆண்டு இந்திய வன பணிக்காக 110 காலியிடங்கள் இருந்தன. இதற்கு நாடு முழுவதும் இருந்து 1,300 பேர் தேர்வு எழுதினர். இதில், தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்து 148 பேர் தேர்வு எழுதி இருந்தனர். தமிழகத்தில் இருந்து 10 பேர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் 45வது ரேங்க்கும் தமிழக அளவில் முதல் ரேங்க்கையும் கோவையை சேர்ந்த பரத் என்ற மாணவன் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 52வது இடத்தையும் தமிழக அளவில் 2வது இடத்தையும் சென்னை மாணவன் நரேந்திரன் பெற்றுள்ளார். அதேபோல, அகில இந்திய அளவில் 64வது இடத்தையும் தமிழக அளவில் 3ம் இடத்தையும் சேலத்தை சேர்ந்த மாணவி திவ்யா பாரதி பெற்றுள்ளார்.
தமிழக அளவில் தேர்வான ஒரே பெண் திவ்யா பாரதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக அளவில் தேர்வான 10 பேரில் 8 பேரும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களும் எங்கள் அகாடமியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.