டேக்-ஹோம் சம்பளம் இனி உயர வாய்ப்பு: பி.எஃப். முறையை மாற்ற மத்திய அரசு யோசனை
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்காக மாத வருவாயிலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி
12% ரத்து செய்யப்பட வாய்ப்பு.
வருங்கால வைப்புநிதிக்காக சம்பளத்திலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக 12% பிடிக்கப்படுவதற்கு சம்பள மட்டத்தில் உச்சவரம்பு நிர்ணயம் செய்ய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணத்திற்கு மாதாந்திர சம்பளம் ரூ.15,000 பெறுபவர்களின் கட்டாயப் பி.எஃப். பிடித்தத்திற்கு ஒரு முடிவு வரும் என்று வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைத்த செயலாளர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது, “ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளம் வரை வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்கள் பங்களிப்பாக பிடிக்கப்படும் தொகையை முழுதும் ரத்து செய்யலாம் என்று நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இதனால் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அதிகமாகும். எல்லா விதமான சம்பளதாரர்களுக்கும் பி.எஃப் ஒரே அளவில் பிடிக்கப்படுவதால் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் அதிக தொகையை பி.எஃப். பிடித்தத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றார்.
தற்போது ரூ.15,000 மாத வருமான உடையவர்களின் பி.எஃப். பிடித்தத்தில் ஊழியர்கள் பங்களிப்பு, பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு என்று 24% பிடிக்கப்படுகிறது.
இதனால் ரூ.15,000 மாதச்சம்பளம் பெறுபவர்களின் ஊழியர் பங்களிப்பான 12% பி.எஃப்-க்கு முழு விலக்கு அளித்துவிட்டால் அவர்கள் கூடுதலாக மாதம் ரூ.1800 வரை குடும்பத்துக்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்படும். இதனை வரி விலக்கு ஒப்பானது என்று இந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிக டேக்-ஹோம் சம்பளம் மூலம் உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கும், முதலீட்டு சுழற்சியில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் என்று அரசு நம்புகிறது. அதாவது குறைந்த மாதவருவாய் உள்ளவர்களிடம் கட்டாயமாக பி.எஃப். தொகை பிடித்தம் செய்வதை மத்திய அரசு முற்றிலும் அகற்ற விரும்புகிறது.
தொழிலாளர் அமைச்சகம் மற்றும் வருங்கால வைப்பு நிதிய அதிகாரிகளிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இத்திட்டத்துக்கு ஆதரவு அளித்திருப்பதாக தெரிகிறது.
இது குறித்து டீம்லிசின் துணைத்தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி கூறும்போது, “முறையான துறைகளில் ஒருவர் மாதம் ரூ.15,000 சம்பளம் பெறுகிறார் என்றால் இ.பி.எப், ஊழியர்கள் ஸ்டேட் இன்ஷூரன்ஸ் வகையில் 44.3% பிடித்தம் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் இதே மாதம் ரூ.55,000 சம்பாதிப்பவர்களுக்கு இந்தப் பிடித்தம் அவர்கள் சம்பளத்திலிருந்து வெறும் 8% மட்டுமே” என்றார்.
இந்தப் பிடித்தங்களினாலேயே முறைசாரா துறைகளில் நுழையும் பணியாளர்கள் முறைசாரா ஊழியர் ஒப்பந்த முறைகளில் பணியாற்ற ஒப்புக் கொள்கின்றனர், காரணம் அவர்கள் டேக்-ஹோம் சம்பளம் அதிகமாக இருப்பதை விரும்புகின்றனர்.
தற்போது மத்திய அரசு 12% ஊழியர் பங்களிப்பு பி.எஃப். பிடித்தத்தை ரத்து செய்தால் முறைசார் துறைகளில் அதிக பணிகளை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.