'உதவி பொறியாளர் தேர்வை மத்திய ஆணையம் நடத்தணும்
'தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் நியமிக்க முடிவு செய்துள்ளது. ஜன., 31ல், எழுத்து தேர்வு நடந்தது; ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் தேர்வெழுதினர். எழு
த்து தேர்வு முடிவுகள், அண்ணா பல்கலையிடம் உள்ளது. ஆனால், உதவி பொறியாளர் தேர்வு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவை வெளியிட, காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேர்முக தேர்வை, மத்திய மின்சார ஆணையம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. எரிசக்தி துறை அதிகாரி கூறியதாவது:உதவி பொறியாளர் நியமனத்தில், எழுத்து தேர்வுக்கு, 85 மதிப்பெண்; நேர்முக தேர்விற்கு, 15 மதிப்பெண். மின் வாரிய தலைவர் சாய்குமார் எடுத்த முயற்சியால் எழுத்து தேர்வு, அண்ணா பல்கலை மூலம் நியாயமாக நடந்துள்ளது. ஆனால், நேர்முக தேர்வை, மின் வாரிய அதிகாரிகள் தான் நடத்துவர். இதில், அரசியல் சிபாரிசு உடையவர்களுக்கு அதிக மதிப்பெண் கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே, நேர்முக தேர்வை, வெளிநபர்கள் அதாவது, மத்திய மின்சார ஆணையம் போன்ற அதிகாரிகள் மூலம் நடத்த வேண்டும். அப்போது தான், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.