சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 83 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 



நேர்முக தேர்வு மார்ச் 8-ந் தேதி தொடங்குகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. 


முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். 

அதன்படி 1,295 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மெயின் தேர்வு முடிவு வெளியீடு முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி வெளியிடப்பட்டது. 

இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 18-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடந்தது. மெயின் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் இந்தியா முழுவதும் 2,797 பேர் தேர்ச்சி பெற்றனர். மனிதநேய மையத்தில் 83 பேர் தேர்வு சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. அந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 55 பேர் மாணவர்கள், 28 பேர் மாணவிகள். 

கடந்த ஆண்டு மனிதநேய மையத்தில் 71 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு கூடுதலாக 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலவச பயிற்சி இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (சனிக்கிழமை) முதல் எமது மையத்தில் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். 

அவ்வாறு நேர்முக தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அனைத்து வசதிகளும் இலவசமாக செய்துதரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)