அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை:சி.இ.ஓ. எச்சரிக்கை
சேலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அ.ஞானகௌரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, நகரவை, நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களில் சிலர் அரசுப் பணியில் இருக்கும் நிலையில் தனியார் பள்ளிகளிலும் பகுதி நேரம் பணிபுரிவதாகப் புகார் எழுந்துள்ளது.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் வகுப்பெடுக்கச் செல்லக் கூடாது என அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுப் பணியாளராக பணிபுரிந்து அரசு ஊதியம் பெற்று வரும்நிலையில் தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக பணிபுரிவது அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் எவரேனும் தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியராகப் பணிபுரிவதாகக் கண்டறியப்பட்டால்அப்பணியாளர் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு இச்செயல்முறைகள் நகலினை சுற்றுக்கு விடப்பட்டு கையொப்பம் பெற்று பள்ளியின் கோப்பில் வைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.