சமூக வலைதளங்கள் : பொய் செய்திகளை கண்காணிக்க புதிய திட்டம்
சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் வெளியிடப்படும் செய்திகள், கருத்துகள், விமர்சனங்கள் போன்றவற்றில், எதிர்மறையான, பொய்யான கருத்துகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் இணையதளம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இணையதளங்கள், பத்திரிகை - தொலைக்காட்சிகளின் இணைய செய்தி தளங்கள், 'பிளாக்' எனப்படும் வலைப்பூ, டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் - ஆப் போன்ற சமூக வலைதளங்களில், கருத்து பரிமாற்றம் மிக வேகமாக நடந்து வருகிறது.
இதை பயன்படுத்தி, பலர், தங்களுடைய சொந்தக் கருத்து என்ற பெயரில், மக்களிடையே மோதல்கள், பிரச்னைகள், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதை தடுப்பதற்காக, இதுபோன்ற பிரச்னைக்குரிய, பொய்யான
செய்திகளை உடனடியாக கண்டுபிடித்து, அதற்கு உரிய பதில்களை பதிவு செய்வதற்காக, தேசிய மீடியாபகுப்பாய்வு அமைப்பை, உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை, டில்லி ஜவஹர்லால்நேரு பல்கலையில், தேச விரோத கோஷமிட்ட பிரச்னை போன்றவை, மிகப் பெரிய போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தவறான, பொய்யான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கவும், அதனால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் இந்த புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எப்படி செயல்படும்?
* பிரச்னை, சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களுக்கு, அதன் தன்மைக்கு ஏற்ப, உடனடியாக அந்த இணையதளம் அல்லது சமூக வலைதளத்தில், பதில் பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால், செய்திக் குறிப்புகள் வெளியிடுவது, பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவதுஎன, உண்மை நிலைமை குறித்து விளக்கப்படும்
* டில்லியைச் சேர்ந்த, இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப மையத்தின் உதவி பேராசிரியரான பொன்னுரங்கம் குமரகுரு வடிவமைத்துள்ள, புதிய மென்பொருளைத் தொடர்ந்து, இந்த புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
* இந்த மென்பொருளை பயன்படுத்தி, ஒரு செய்தியில் கூறியுள்ளது உண்மையா, அதன் நம்பகத்தன்மை, பிரச்னை ஏற்படுத்துமா, இதற்கு முன் இந்த எழுத்தாளர் இதுபோல் எத்தனை முறை பிரச்னைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என அறிய முடியும்
* பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அமைந்தபின், செய்தி கண்காணிப்புக்காக உருவாக்கப்படும், மூன்றாவது அமைப்பாக இது இருக்கும்
* 'நியூ மீடியா விங்' என்ற பெயரில், சமூக தளங்கள், ஆன் லைன் செய்திகளை கண்காணிக்கும் அமைப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டது. அடுத்ததாக, மின்னணு செய்தி கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு, 600க்கும் மேற்பட்ட சானல்களை கண்காணிக்கின்றன.