24 மணி நேரத்துக்குள் வெளிநாட்டு மாணவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்
வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டினர் குறித்து, பதிவாளரால் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரத்துக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதேபோல், ஹோட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகளும், அங்கு வரும் வெளிநாட்டினர் குறித்து 24 மணி நேரத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.வெளிநாட்டினரின் பெயர், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், என்ன நோக்கத்துக்காக இந்தியாவுக்கு அவர்கள் வந்துள்ளனர், எவ்வளவு காலம் இந்தியாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர், இந்தியாவில் அவர்கள் சந்திக்க இருக்கும் நபர்களின் விவரங்களைச் சேகரித்து ஆவணப் புத்தகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு, 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருந்தாதுஎன்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.