50 லட்சம் போலி ரேஷன் கார்டு தமிழகம் முழுவதும் புழக்கம்
தமிழகத்தில், ௫௦ லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு, ரேஷனில் வழங்கும் பொருட்களுக்காக, ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறது. ரேஷன் கார்டு பெற, தனி சமையல் அறை இருக்க வேண்டும்; நாட்டில், வேறு எங்கும் ரேஷன் கார்டு இருக்கக் கூடாது.
கடந்த, 2005க்கு பின், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாததால், ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, அதன் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனால், ஒரே குடும்பத்தில் வசிக்கும் பலரும், தனித்தனி ரேஷன் கார்டுகளை வாங்கி வருகின்றனர். இதைத் தடுக்க, அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்க, அரசு முடிவு செய்தது.
ஆனால், அதற்கான பணிகளை, குறித்த காலத்தில் துவங்காததால், இதுவரை ஸ்மார்டு கார்டு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், 50 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பதாக, உணவுத் துறை கண்டறிந்து உள்ளது.
உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில், பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்ட விவரம்; மக்கள் தொகை கணக்கு எடுப்பின் போது கிடைத்த விவரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, 50 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், புதிய அரசு பொறுப்பேற்றதும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும். போலியாக உள்ள, 50 லட்சம் ரேஷன் கார்டுகள் நீக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்பது கோடி:தமிழகத்தின், மக்கள் தொகை, தற்போது, எட்டு கோடியை நெருங்கி உள்ளது. ஆனால், ரேஷன் கார்டுகளில் உள்ள பெயர்களின் எண்ணிக்கை, ஒன்பது கோடிக்கும் அதிகமாக உள்ளதாக, உணவுத் துறை கண்டறிந்துள்ளது.