கட்டாய உரிமையாக்கியும், 60 லட்சம் பேருக்கு கல்வி எட்டாக்கனி.

அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில், கல்வியை அடிப்படைஉரிமையாக அறிவித்து, ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்,நாடு முழுவதும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


         நாட்டில், 6 - 14வயது வரைஉள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய,இலவச கல்வியை அளிக்கும் வகையில்,கல்வியை அடிப்படை உரிமையாக அறிவிக்கும்,கல்வி உரிமை சட்டம், 2010ல் அமல்படுத்தப்பட்டது. 


இதன் மூலம்,கல்வியை அடிப்படை உரிமையாக அறிவித்துள்ள, 135நாடுகளில்,இந்தியாவும் சேர்ந்தது. இந்த சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து,கல்வி உரிமை சட்ட அமைப்பு என்ற,அரசு சாரா நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இந்த அமைப்பின் மாநாடு,டில்லியில் நேற்று நடந்தது. அதில்,இந்த திட்டம் குறித்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.அதில்,இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த,ஆறு ஆண்டுகளில்,சில முன்னேற்றம் ஏற்பட்டாலும்,நாடு முழுவதும்,தற்போது, 60லட்சம் குழந்தைகளுக்கு கல்வி உரிமை கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதில், 76சதவீதம் பேர்,அதாவது, 46லட்சம் பேர்,பிற்படுத்தப்பட்டோர்,பழங்குடியினர்,சிறுபான்மையினர் என்பதும் தெரியவந்து உள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபின், 3.5லட்சம் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப் பகுதிகளில், 99சதவீதம் பேருக்கு, 1கிலோ மீட்டர் தொலைவுக்குள் பள்ளி வசதி உள்ளது.84.4சதவீதம் பேருக்கு பள்ளியில் மதிய உணவு அளிக்கப்படுகிறது.48.2சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை, 2005ல், 1.34கோடியில் இருந்து, 2014ல், 60லட்சமாகக் குறைந்துள்ளது.இருப்பினும்,ஆரம்பக் கல்வித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறைவாக இருப்பது,மாநில அரசுகள் இதற்கான நிதியை முறையாக பயன்படுத்தாதது,தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக கல்வி அதிகாரிகள்,மாநில அரசு அதிகாரிகள் செயல்படுவது போன்றவையே,இன்றும், 60லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு,கல்வி எட்டாக்கனியாக உள்ளது என்று,ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு தேவை

நேற்று நடந்த மாநாட்டில்,துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேசியதாவது:ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தைப் போல,இந்த சட்டத்திலும் உள்ள பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து,பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை நிறைவேற்றும்,அனைவருக்கும் கல்வி இயக்ககம் எனப்படும் சர்வ சிக் ஷா அபியான் திட்டத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.2009 - 10ல், 12ஆயிரத்து, 825கோடியாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு, 2016 - 17ல், 22ஆயிரத்து, 500கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பள்ளிக் கல்வித் துறை,மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்,சர்வ சிக் ஷா அபியான் போன்ற திட்டங்களில், 60சதவீதம் நிதியை மத்தியஅரசு ஒதுக்குகிறது. ஆனால்,இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை,முழுமையாக பயன்படுத்திக்கொள்வதில்லை.2015 - 16ம் நிதியாண்டில், 2015செப்டம்பர் வரை, 57சதவீத நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதுபோன்ற குறைகளை களைய வேண்டும். இவ்வாறு அன்சாரி கூறினார்.

தனியார் பள்ளிகள் ஆதிக்கம்:

மாநாட்டில் வெளியிடப்பட்ட,சட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு அறிக்கையில்,ஆரம்பக் கல்வியை கற்போரில், 66சதவீதம் பேர்,அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே படிக்கின்றனர்என,குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள ஒரு சில மாநிலங்களில்,தமிழகமும் ஒன்று. கரும்பலகைகள்,ஆசிரியர் - மாணவர்கள் விகிதாச்சாரம்,இலவச பாடப்புத்தகம்,குடிநீர்,கழிப்பறை வசதி ஆகியவற்றில்,தமிழகம் முன்னேறியுள்ளது.

அதே நேரத்தில்,தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அதிக அளவில் அனுப்பும் மாநிலங்களில்,தமிழகமும் ஒன்று. கேரளாவில், 71.37சதவீதம் பேர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். மஹாராஷ்டிராவில் இது, 61.2சதவீதமாக உள்ளது. தமிழகத்தில், 54.95சதவீதம் பேர்,அதாவது படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தனியார்பள்ளிகளில் படிக்கின்றனர்.கல்வி மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட,கோத்தாரி கமிஷன்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என, 1966 - 68ல் பரிந்துரைத்தது. ஆனால்,கடந்த,எட்டு ஆண்டுகளில், 3சதவீதத்துக்கு மேல் ஒதுக்கப்படவில்லை. 

அம்பரிஷ் ராய்,தேசிய ஒருங்கிணைப்பாளர்,கல்வி உரிமை சட்ட அமைப்பு

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank