கின்னஸ் சாதனை படைத்தார் பி.சுசீலா :17,695 பாடல்கள் பாடியுள்ளார்:
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா, 80, உலகளவில், அதிக பாடல்களை தனியாக பாடியதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
திரைப்படத்துறையில், 1953ல், பெற்ற தாய் என்ற படத்தில், 'எதற்கு அழைத்தாய்...' என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் பி.சுசீலா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என, ஆறு மொழிகளில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சுசீலாவின் அமெரிக்க ரசிகர்கள், 'சுசீலா.ஓஆர்ஜி' என்ற இணையதளம் மூலம், அவரது பாடல் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். அதில், தற்போது வரை, 17 ஆயிரத்து, 695 பாடல்களை சுசீலா பாடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே இவ்வளவு பாடல்களை யாரும் பாடியதில்லை. இதையடுத்து, சுசீலாவுக்கு, கின்னஸ் புத்தகத்தில், சாதனையாளராக இடம் கிடைத்துள்ளது.
சினிமா பாடல் மட்டுமல்லாது பக்தி பாடல்களையும் பாடியுள்ள பி.சுசீலா, தமிழில், இரண்டு முறை; தெலுங்கில், நான்கு முறை என, ஆறு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தெலுங்கில், கண்டசாலா; தமிழில் டி.எம். சவுந்திரராஜன்; கன்னடத்தில், பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய, 'டூயட்' பாடல்கள், தென்னிந்திய திரைப்பட உலகில் நீங்கா புகழ் பெற்றவை. கின்னஸ் சாதனை படைத்த சுசீலாவுக்கு திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்ற பி.சுசீலா தன், 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், சென்னையில், நேற்று, முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:சினிமாவில் பாடுவதற்கு முன், எச்.எம்.வி., இசைத்தட்டில் தான் பாடினேன். என் குரலை கேட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார், என்னை, ஏ.வி.எம்., நிறுவனத்தில் ஒப்பந்தமாக்கி, என் பேருக்கும், புகழுக்கும் காரணமானார். அவர் தான் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். இசையமைப்பாளர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கின்றனரோ அதையே நான் பாடினேன்; இதில் சிரமம் என்பது கிடையாது.
நான் பாடிய பாடலை எழுதிய கண்ணதாசன், வாலி போன்றோர் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களை பற்றி நான் என்ன சொல்ல. ஆரம்ப கட்டத்தில், பத்திரிகையாளர்களே என் பிரபலத்திற்கு காரணமாக இருந்தனர். என் பாடலுக்கு நடித்த நடிகைகளும் பாட்டுக்கு உயிர் கொடுத்தனர்; அவர்களுக்கும் என் நன்றி.
என் வாழ்க்கையை இசைக்காகவே அர்ப்பணித்துள்ளேன். இவை அனைத்தும் கடவுள் எனக்கு தந்த வரம். மீரா படத்தில், என்னையும் நடிக்க அழைத்தனர். ஆனால், 'கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க வராது' எனக் கூறிவிட்டேன். 'உனக்கு கோடி ரூபாய் எல்லாம், தர முடியாதும்மா...' என, கிண்டலாக கூறினர்.
சில ஆண்டுகளுக்கு முன், மனதை திருடி விட்டாய் படத்தில், தயாரிப்பாளர் மிகவும் விரும்பி கேட்டதால், ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன். இப்போதுள்ள பலர் சிறப்பாக பாடுகின்றனர். என் வாரிசு என்றால், என் மருமகள் சந்தியாவை கூறலாம். பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் பாடியுள்ளார். எனக்கு மீண்டும், 'சான்ஸ்' கிடைத்தால் பாடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல விருதுகள் பெற்றவர்:பி.சுசீலா, 1935 நவம்பர், 13ல், ஆந்திராவில் பிறந்தார். படிக்கும் போதே இசை மீது ஏற்பட்ட ஆசையால், இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலையில் இசைத்துறையில், 'டிப்ளமோ' முடித்தார். 15 வயதில், சென்னை வானொலியில், 'பாப்பா மலர்' நிகழ்ச்சியில் பாடினார். இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவ், சுசீலாவை, முதல் முறையாக சினிமாவில் பின்னணி பாட வைத்தார்.
ஆறு முறை தேசிய விருதுகள், பத்ம பூஷண் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், இவரால் சிறப்பு பெற்றன. சுசீலாவுக்கு, ஐந்து சகோதரி, மூன்று சகோதரர்கள் உள்ளனர். 1957ல் மருத்துவர் மோகன் ராவை திருமணம் செய்தார். 'கணவர் மருத்துவர் என்பதால், என் குரல் வளம் பாதுகாப்பாக இருந்தது' என, பேட்டி ஒன்றில் சுசீலா குறிப்பிட்டுள்ளார். சுசீலாவுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.