தர்மபுரி விடைத்தாள் திருத்தும் மையத்தில் உடைந்து விழுந்த சீலிங்: தப்பிய ஆசிரியர்கள்
தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தும் மைய கட்டடத்தின் சீலிங் திடீர் என இடிந்து விழுந்தது. அப்போது ஆசிரியர்கள் அங்கு இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயர் தப்பினர்.
தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ், 2 விடைத்தாள் திருத்தும் மையம் செயல்படுகிறது. பள்ளி வளாகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தில், இப்பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் புனித வெள்ளி என்பதால், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்து. நேற்று காலை விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு வந்த ஆசிரியர்கள், எட்டாம் வகுப்பு இ பிரிவில் அமைக்கப்பட்டிருந்த விடைத்தாள் திருத்தும் அறைக்கு சென்ற போது, அந்த அறையின் சீலிங் உடைந்து சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தேர்வுத்துறையினர் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கல்வித்துறையினர் விரைந்து வந்து, கட்டட சேதம் குறித்து ஆய்வு செய்து, பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இவ்வகுப்பில் இருந்து விடைத்தாள் திருத்தும் இடத்தை அருகில் உள்ள வகுப்பறைக்கு மாற்றினர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இவ்வறையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த, 16 ஆசிரியர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதுடன், மாணவர்களின் தேர்வு தாளும் எவ்வித சேதம் இன்றி தப்பியது.