பாட்டில் குடிநீர்: அறிந்ததும் அறியாததும்.

உலகத் தண்ணீர் நாள்: மார்ச் 22
வெயில் காலம் வருகிறது. உடல் வெப்பத்தையும் தண்ணீர் தாகத்தையும் தணித்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படும். அந்தக் காலத்தில் வீட்டுக்கொரு பானைத் தண்ணீர் தாகம் தணித்தது. பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் முளைத்தன.


தண்ணீரைப் போய் யாராவது விற்பார்களா என்று கேட்டுக்கொண்டிருந்த காலம் போய், தண்ணீர் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் காலம் இது.
தண்ணீர் இன்றைக்கு இலவசமில்லை. எவ்வளவு அவசரமென்றாலும், ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரை 15-20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாட்டில் குடிநீர் நம் பாக்கெட்டைப் பதம் பார்ப்பது மட்டுமில்லாமல், வேறு பல சூழலியல் கேடுகளையும் சேர்த்தே செய்கிறது. அவை என்ன?:
>> சாப்பிடாமல் ஒருவர் சராசரியாக 10 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் குடிக்காமல் மூன்று முதல் 5 நாட்கள்தான் இருக்க முடியும். எனவே, சுத்தமான, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய தண்ணீர் என்பது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமை.
>> உலகில் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படும் தண்ணீர் மாசுபாட்டதற்கு அடிப்படைக் காரணம் நகர்மயமாதலும், தொழிற்சாலைகளும்தான். ஆனால், இன்றைக்குத் தொழிற்சாலைகள் சுத்தமான தண்ணீர் என்பதையே ஒரு விற்பனைப் பண்டமாக்கிவிட்டன.
>> 19-ம் நூற்றாண்டில் தங்கம் மதிப்புமிக்கதாக இருந்ததால், பணக்காரர்கள், முதலாளிகள் அதைத் தேடி ஓடினர். கடந்த நூற்றாண்டில் ‘கறுப்புத் தங்கம்’ என்று பெட்ரோல் அழைக்கப்பட்டது போல், இந்த நூற்றாண்டில் ‘நீலத் தங்கம்’ என்று அழைக்கப்பட்டுத் தண்ணீர் வர்த்தகத்தில் முதலீடுகள் குவிந்துள்ளன. பாட்டில் குடிநீர் விற்பனை மட்டுமல்லாமல், நகராட்சி தண்ணீர் விநியோகத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதிப்பதைக் கவனிக்க வேண்டும்.
>> சுற்றுப்புறச் சுகாதாரம், உடல்நல அக்கறை அதிகமுள்ள இந்தக் காலத்தில் பாட்டில் குடிநீர்தான் சுத்தமானது என்று மூடநம்பிக்கை பரவலாக உள்ளது. அது மாநகராட்சி, நகராட்சி தண்ணீரோ, ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரோ - குடிக்கக்கூடிய தண்ணீர் இன்னமும் குறைந்த செலவில் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதைக் காய்ச்சிப் பயன்படுத்தாமல் பாட்டில் குடிநீரைக் குடிப்பதால், பிளாஸ்டிக் குப்பை கோடிக்கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கிறது.
>> பாட்டில் குடிநீர் பயன்பாட்டால், ஒவ்வோர் ஆண்டும் 15 கோடி கிலோ பிளாஸ்டிக் குப்பை சேர்ந்துகொண்டிருக்கிறது. இது 7,500 திமிங்கிலங்களின் எடைக்குச் சமம். அமெரிக்காவில் ஒரு நாளில் தூக்கியெறியப்படும் குடிநீர் பாட்டில்களின் எண்ணிக்கை 6 கோடி.
>> வடக்கு பசிஃபிக் குப்பை சுழற்சி (Gyre) என்ற பெரும் குப்பை மலை பசிஃபிக் கடலில் சுழன்று கொண்டிருக்கிறது. இதன் குறைந்தபட்சப் பரப்பு ஏழு லட்சம் சதுரக் கிலோமீட்டர்.
>> அமெரிக்காவிலேயே வாங்கப்படும் ஐந்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் ஒன்று மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்கிறது. இந்திய நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்தியாவில் 100-ல் 5 பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சிக்குச் செல்வதே ஆச்சரியம்தான்.
>> பிளாஸ்டிக் (PET) பாட்டில்கள், பிளாஸ்டிக் கலன்கள் உற்பத்தியில் பாதிக்கு மேல் குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டுக்காகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.
>> ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரின் உற்பத்தி நடைமுறை, போக்குவரத்து போன்றவற்றுக்காகக் குறைந்தபட்சம் 100 மி.லி. பெட்ரோல் செலவாகிறது. அது மட்டுமல்லாமல் பெட் பாட்டில்களின் அடிப்படை மூலப்பொருள் கச்சா எண்ணெய்தான். பெட் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு, பயன்பாடு, குப்பையாகப் போடப்படுவது என பல்வேறு வகைகளில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, சந்தேகமில்லாமல் புவி வெப்பமடைகிறது.
>> இன்றைக்குச் சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் - டீசலின் சராசரி விலை ரூ. 50 - 60. ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரின் விலை சராசரியாக ரூ. 15-20. அதாவது நான்கில் அல்லது மூன்றில் ஒரு பாகம். எதிர்காலத்தில் பாட்டில் குடிநீரின் விலை இன்னும் அதிகரிக்கலாம். இதிலிருந்து நாம் எவ்வளவு வீணாகச் செலவு செய்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அது மட்டுமல்ல, கச்சா எண்ணெயின் கடினமான சுத்திகரிப்பு நடைமுறையில் முதலீடு செய்து பெட்ரோல், டீசலாகப் பிரித்து விற்பதை விடவும், எளிதாகக் கிடைக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து ஒரு நிறுவனம் எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
>> ஒரு பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்வதில் தண்ணீரைவிட, பிளாஸ்டிக் பாட்டில், மூடி, லேபிள் போன்ற மற்ற அம்சங்களுக்கே அதிக அளவு செலவிடப்படுகிறது. பிறகு பாட்டிலைப் பேக் செய்ய, போக்குவரத்துக்கு, கடைசியாக மயக்கும் விளம்பரத்துக்குச் செலவு செய்யப்படுகிறது.
>> பாட்டில் குடிநீர் நிறுவனங்கள் ஆறுகள், நீர்நிலைகளில் இருந்து ஒரு லிட்டருக்கு 1.50 பைசா முதல் 3.75 பைசா என்ற விலையில் தண்ணீரை மிகக் குறைந்த விலைக்கு வாங்குகின்றன. அதைச் சுத்திகரிக்க 0.25 பைசா, பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 3-4 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், மொத்தச் செலவு 5 ரூபாயைத் தாண்டாது. பிறகு இதையே 4 - 5 மடங்கு லாபத்தில் விற்கின்றன.
>> குளிர்பான நிறுவனங்கள் தங்களுடைய விற்பனை சந்தையின் முக்கிய அம்சமாகப் பாட்டில் குடிநீரை வைத்திருக்கின்றன. இரண்டுக்குமான விலை வித்தியாசம் அதிகமில்லை. பாட்டில் குடிநீருக்கான உற்பத்திச் செலவும் குறைவு. அதேநேரம் குளிர்பானம் அருந்தாதவர்கள்கூட, பாட்டில் குடிநீரைக் குடிக்கிறார்கள். சாதாரணக் குடிநீர் சீர்கெட்டுவிட்டது என்ற பிரசாரத்துக்கும், பாட்டில் குடிநீர் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணம்.
>> அதேநேரம் ஆற்றுநீரோ, ஆழ்துளைக் கிணற்று நீரோ பெரிதாக எந்தச் சுத்திகரிப்பு நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்படாமல் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பாட்டில் குடிநீரில் பூச்சிக்கொல்லிகள் கண்டறியப்பட்டது இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
>> புது டெல்லி ‘அறிவியல், சுற்றுச்சூழல் மையம்’ (சி.எஸ்.இ.) 2003-ல் நடத்திய பரிசோதனை முடிவின்படி அதிகம் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் பாட்டில் குடிநீர் மாதிரிகளில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் லிண்டேன், மாலத்தியான், குளோர்பைரிஃபாஸ், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லி எச்சங்கள் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
>> பாட்டில் குடிநீரில் இருக்கும் நஞ்சு நீண்ட காலமாக உடலில் சேர்வது புற்றுநோய், கல்லீரல், சிறுநீரகங்களைச் சிதைக்கக்கூடியதாகவும், நரம்புமண்டலக் கோளாறுகளை உருவாக்கக்கூடியதாகவும், நோயெதிர்ப்புசக்தி குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
>> 2007-2012-ம் ஆண்டுவரையிலான காலத்தில் சென்னையில் விற்பனை செய்யப்படும் 70 நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீரில் தீமை பயக்கும் பாக்டீரியா இருப்பது சென்னை மாநகராட்சி மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்தது.
>> பாட்டில் குடிநீர், நீண்ட நேரம் வெயிலில் இருக்கும்போது பிளாஸ்டிக்கில் இருக்கும் தாலேட் போன்ற வேதிப்பொருட்கள் தண்ணீருடன் கலந்துவிட வாய்ப்பு அதிகம். அது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இப்படியாக நாம் வாங்கும் ஒவ்வொரு குடிநீர் பாட்டிலும் உலகின் வளத்தைச் சுரண்டி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை பெருமளவு உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்போம்.
பாட்டில் குடிநீர்: மாற்று என்ன?
>> நகராட்சிக் குழாயில் கிடைக்கும் தண்ணீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துத் தாராளமாகக் குடிக்கலாம். அதனால் உடலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. அது விலை குறைந்தது, பாதுகாப்பானது, எப்போதும் கிடைப்பது.
>> ஒரு எவர்சில்வர் தண்ணீர் பாட்டில் அல்லது நல்ல தரமான பிளாஸ்டிக்கில் விற்கப்படும் பாட்டிலில் வீட்டிலிருந்தே எப்போதும் தண்ணீரை நிரப்பி செல்லலாம். இதனால் தேவையற்ற செலவு குறையும், பாட்டில் தண்ணீரில் இருக்கும் பூச்சிக்கொல்லி உள்ளிட்ட நச்சுகள் நம் உடலில் சேராமலும் இருக்கும்.
>> நிறுவனங்கள், அமைப்புகள் தங்களுடைய வளாகங்களில் பாட்டில் குடிநீரைத் தடை செய்து, சுத்தமான தண்ணீரை விநியோகிக்க ஏற்பாடு செய்யலாம்.
குடிநீரும் இந்தியாவும்
>> 2013-ல் இந்திய பாட்டில் குடிநீர் சந்தையின் மதிப்பு ரூ. 6,000 கோடி.
>> பாட்டில் குடிநீர் விற்பனையில் உலக அளவில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.
>> சராசரியாக நகராட்சி குழாய் குடிநீரைப் போலப் பத்து மடங்கு விலையில் பாட்டில் குடிநீர் விற்கப்படுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank