அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் உரை
“ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளையும் வாசியுங்கள்… தாய் மொழி தமிழை சுவாசியுங்கள்.
நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோதெல்லாம் கிராமப் பகுதிகளில் இருக்கும் அரசுப்பள்ளிகளுக்குத்தான் செல்வேன். ஏன் தெரியுமா? அங்குதான் ஏழையின் மகனோ, பாட்டாளியின் மகளோ படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்க என் அரசுப்பள்ளி ஆசிரியர் இருப்பார். அங்கு அவர் என் தாய்மொழி தமிழில் கற்பிப்பார். ஒருநாள் மதுரைக்கு அருகே உள்ள அரசுப்பள்ளிக்கு சென்றபோது, அங்கிருந்த மாணவர்களிடம் கேட்டேன். Whats ur name? பெயரைச் சொன்னார்கள்.
What’s your father? என்று கேட்டேன். எந்த குழந்தைக்கும் சொல்லத் தெரியவில்லை. அதன்பிறகு ஆயிரம் கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை கொடுத்து, அந்த மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கச் சொன்னேன். மூன்றுமாதம் கழித்து, வேறொரு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு சென்றேன், அங்கிருக்கும் குழந்தைகளிடம் கேட்டேன் What’s your father?, அதற்கு ஒரு குழந்தை my father is a tailor, my father is a driver என்று சொன்னார்கள். தேவிகா எனும் மாணவி சொன்னாள், my father is a உரக்கடை என்று சொன்னாள். உடனே உளம் மகிழ்ந்து, சபாஷ் என்று சொன்னேன். ஏன் தெரியுமா? தான் சொல்ல வந்த கருத்தை, எனக்கு புரியும்படி சொல்லிவிட்டாள். ‘நீ தமிழன்தானே, உனக்கு தமிழ் தெரியும்தானே… உனக்கு புரியும்படி சொல்லிவிட்டேன் போ’ என்பது போல் இருந்தது அவளது பார்வையும் பதிலும். அகமகிழ்ந்து போனேன். தமிழைப் பேசினால் தமிழிலே பேசு… ஆங்கிலத்தில் பேசினால் ஆங்கிலத்தில் பேசு. தமிழைக் கொலை செய்யக்கூடாது என்பதே, எனது வாதம். இங்கு ஏன் தெரியுமா தேவிகாவை பாராட்டினேன்.
எல்லோரும் இங்கு தமிழை கொலை செய்கிறார்கள். முதன் முதலாக என் அரசுப்பள்ளி மாணவி, ஆங்கிலத்தை கொலை செய்தாள். அவளைப் பாராட்டினேன். பாமர மக்களின் ஒரே ஆதாரமாக இருப்பது அரசுப்பள்ளிகளே. அங்கு என் தாய்த்தமிழில் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலத்தையும் பயிற்றுவிக்கிறார்கள். அவர்களை போற்றுகிறேன்”
- (ஒளிஓவியர் தங்கர் பச்சனின் ‘சொல்லத்தோணுது’ நூல் வெளியீட்டு விழாவில், ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயம், 26.03.2016)