உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஹரீஷ் ராவத் ஆட்சியில் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் தலைதூக்கியதை அடுத்து அங்கு அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே உத்தரகண்டில் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சரவை பரிந்துரைத்தது.
மத்திய அமைச்சரவையின் இந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை தனது ஒப்புதலை அளித்தார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதியன்று மானியக் கோரிக்கை மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜகவுடன் சேர்ந்து இந்த 9 பேரும் குரல் கொடுத்தனர். ஆனால், அதற்கு பேரவைத் தலைவர் அனுமதியளிக்கவில்லை.
இதையடுத்து, சட்டப்பேரவையில் ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும், ஆகையால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் ஆளுநர் கே.கே.பால் இடம் உரிமை கோரினர். இதனால், சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று (மார்ச் 28) பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி ஹரீஷ் ராவத்துக்கு ஆளுநர் கெடு விதித்தார்.
இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஹரீஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபடுவது போன்ற ரகசிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உத்தரகண்டில் ஹரீஷ் ராவத் அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தில்லிக்கு அவசரமாக திரும்பி மத்திய அமைச்சரவையை சனிக்கிழமை இரவு கூட்டி உத்தரகண்ட் மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். மாநில அரசியல் நிலவரம் குறித்து அந்த மாநில ஆளுநர் அனுப்பியிருந்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டது. கூட்டத்தில், உத்தரகண்டில் அரசியல் நிலவரம் மிகவும் மோசமடைந்து விட்டதாகவும், இந்த சூழ்நிலையில் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், மோதல் மூளலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. உத்தரகண்டில் அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின் கீழ் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசைக் கலைத்து விட்டு, சட்டப்பேரவையை முடக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பிரணாபுடன் அருண் ஜேட்லி சந்திப்பு: இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை இரவு நேரில் சந்தித்து, உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் பரிந்துரையை செயல்படுத்த வேண்டியதன் காரணத்தை விளக்கினார். அதன்பின், மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை காலை தனது ஒப்புதலை அளித்தார்.
9 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: இதனிடையே, ஹரீஷ் ராவத் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய விஜய் பகுகுணா உள்ளிட்ட காங்கிரஸின் 9 அதிருப்தி எம்எல்ஏக்களையும் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் ஞாயிற்றுக்கிழமை மாலை தகுதி நீக்கம் செய்தார்.
உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதை முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுக்கு தலைவராக செயல்பட்டு வருபவருமான விஜய் பகுகுணா வரவேற்றுள்ளார்.
சரியான முடிவே
உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது சரியான முடிவுதான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நியாயப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை தொடர்பான மசோதாவை கடந்த 18ஆம் தேதி நிறைவேற்றும்போதே ஹரீஷ் ராவத் தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, அவரது அரசு தொடர்ந்து பதவியில் நீடித்தது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஹரீஷ் ராவத் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது சிறந்த உதாரணமாகும் என்றார் ஜேட்லி.
மோடியின் கரங்களில் ரத்தக்கறை படிந்துவிட்டது
உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு ஹரீஷ் ராவத் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
இது ஜனநாயக மற்றும் அரசமைப்புச் சட்ட படுகொலையாகும். உத்தரகண்ட் மாநில மக்களின் விருப்பங்களை நசுக்கியதன் மூலம், பிரதமர் மோடியின் கரங்களில் ரத்தக்கறை படிந்து விட்டது. சட்டப்பேரவையில் எனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க மாநில அரசுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதற்காக பாஜக சதித்திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளது என்றார் அவர்.
ஜனநாயகப் படுகொலை
உத்தரகண்டில் மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பதை ஜனநாயக படுகொலை என்றும், நாட்டுக்கு இதுவொரு துக்கதினம் என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத் கூறுகையில், "ஆட்சி அதிகாரம், பண பலத்தைப் பயன்படுத்தி, அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை மோடி அரசு கவிழ்த்தது. அதேபோல், உத்தரகண்டிலும் தற்போது செய்துள்ளது' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "இதுவொரு ஜனநாயகப் படுகொலையாகும். மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், அரசமைப்புச் சட்டத்தை மீறும் வகையிலேயே உள்ளது. ஜனநாயகத்தின் மீது பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது' என்றார்.