செவிலியர் பள்ளி அங்கீகாரம் ரத்து; மாணவர்களுக்கு பிரச்னையில்லை
திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் பிரச்னை ஏற்படாது என, தமிழ்நாடு அனைத்து தனியார் தொழிற் கல்வி பயிற்சி மைய நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் தலைவர் ஜோதிமுருகன், செயலாளர் சபரி இந்திரகோபால், பொருளாளர் சக்திவேல் கூறியதாவது:
உதவி செவிலியர், செவிலியர் பயிற்சி பள்ளிகள் அங்கீகாரம் பெற்றது தொடர்பாக மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா நடவடிக்கை எடுத்து வருகிறார். 35 செவிலியர் பயிற்சி பள்ளிகள் பாரத் சேவக் சமாஜ் அமைப்பில் அங்கீகாரம் பெற்றுள்ளோம். இந்த அமைப்பு முன்னாள் பிரதமர் நேருவால் துவக்கப்பட்டு, ஏழை, எளியோர், கல்வி இடை நிறுத்தமாகி, மேற்படிப்பு பயில முடியாதவர்களுக்காக உருவாக்கப்பட்டது.
இது திட்ட கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அங்கீகாரம் பெற்று பயிற்சி மையங்கள் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் 10 ஆயிரம் மையங்கள் உள்ளன. இதில் பயில்பவர்கள் சுயவேலைவாய்ப்பு பெற்று தனியார் நிறுவனங்கள் மூலம் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி உள்ளனர். இதற்கான தலைமை அலுவலகம் சென்னை, திருவனந்தபுரத்தில் உள்ளன. கிராமங்களில் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.
எங்கள் நிறுவனங்களில் பயிலும் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தாண்டு தேர்வு எழுதலாம். அவர்களின் படிப்பிற்கு எந்த பாதிப்பும் வராது. இந்தாண்டு மே மாதத்திற்கு பின்பு தமிழக அரசின் அனுமதி பெற்று செயல்பட ஏற்பாடு செய்து வருகிறோம், என்றனர்.