கேண்டிடேட்ஸ் செஸ்: கடைசிவரை கடுமையாகப் போராடிய விஸ்வநாதன் ஆனந்த்!
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதனால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சனுடன் மீண்டும் மோதுகிற வாய்ப்பை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இழந்தார்.
இதன்மூலம் வரும் நவம்பரில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதுகிறார் கர்ஜாகின்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பரில் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. அதில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதுவது யார் என்பதை முடிவு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடந்தது. இதில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.
கடைசிச் சுற்றில் கர்ஜாகினிடம் தோல்வி கண்ட அமெரிக்காவின் கருணா மற்றும் கடைசிச் சுற்றில் டிரா செய்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தனர்.
5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த், கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். 4 வெற்றிகள், 3 தோல்விகள், 7 டிராக்கள் என ஆனந்துக்கு இந்தப் போட்டி நன்றாகவே அமைந்தது. கடைசிப் பகுதி வரை அவரும் வெற்றியாளர்களில் ஒருவராக இருந்தார். 11-ஆவது சுற்றில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தினார். வாழ்வா, சாவா சுற்றான இதில் வென்றதன் மூலம் சரிவிலிருந்து மீண்ட ஆனந்த், 6.5 புள்ளிகளுடன் அமெரிக்காவின் பாபியானோ கருணாவுடன் முதலிடத்தில் இருந்தார். 10-ஆவது சுற்றில் அமெரிக்காவின் பாபியானோ கருணாவிடம் தோற்றதால் நெருக்கடியில் சிக்கினார். 11-ஆவது சுற்றில் வென்றால் மட்டுமே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில், செர்ஜி கர்ஜாகினைத் தோற்கடித்தார்.
இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்பதில் ஆனந்த், கருணா ஆகியோரிடையே போட்டி நிலவியது. அப்போது, செர்ஜி கர்ஜாகின் 6 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருந்தார்.
எதிர்பாராத தோல்வி
ஆனால், 12-ஆவது சுற்றில் ஆனந்த் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடும்போதுதான் ஆனந்துக்கு நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. கருப்பு நிறக் காய்களுடன் ஆடியபோது 3 தோல்விகள், 3 டிராக்கள் என சுமாரான முடிவுகளே ஆனந்துக்குக் கிடைத்துள்ளன. ஆனால் வெள்ளை நிறக் காய்களில் ஆனந்துக்கு 4 வெற்றிகள் கிடைத்துள்ளன. 12-வது சுற்றில், 26 நகர்த்தல்களில் தோல்வியை ஒப்புக்கொண்டார் ஆனந்த். இதனால்தான் ஆனந்தால் இந்தப் போட்டியை வெல்லமுடியாமல் போனது. அடுத்த இரு சுற்றுகளையும் டிரா செய்தார்.
கேண்டிடேட்ஸ் போட்டியில் தான் விளையாடிய விதம் குறித்து ஆனந்த் கூறும்போது:
இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது புதிராகவே இருந்தது. எனக்கு சில அருமையான தருணங்கள் கிடைத்தன. கடைசியில் 3-ம் இடம் என்பது நல்ல முடிவே. இருந்தும் நான் சில ஆட்டங்களில் செய்த தவறுகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இது கனவு போட்டியாக அமைந்திருக்கும். எப்படி இருந்தாலும் நல்ல மனநிலையுடன் திரும்பிச் செல்கிறேன் என்றார்.
சென்னை மற்றும் ரஷ்யாவின் சூச்சி நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்து உலக சாம்பியன் ஆனார் கார்ல்சன். இந்த வருடம் நடைபெறுகிற போட்டியில் கார்ல்சனும் ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினும் மோதவுள்ளார்கள். 2016 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அமெரிக்காவின் நியூயார்க்கில் நவம்பர் 11 முதல் 30 வரை நடக்கவுள்ளது.