'பயாலஜி'யில் 'சென்டம்' கடினமே :மாணவர்கள் கருத்து.
பிளஸ் 2 'பயாலஜி' தேர்வு நேற்று நடந்தது. இதில் 200 மார்க் கிடைப்பது சற்று கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.மாணவர்கள் கருத்து:
என்.நந்தகுமார், மாணவர், சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை:
ஒரு மதிப்பெண் வினாவில் தாவரவியல், விலங்கியலில் 30 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் 23 கேள்விகள் பயிற்சி வினாக்களுக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டன. இரு மதிப்பெண் வினாக்கள் 15ம், 5 மதிப்பெண் வினாக்கள் 7ம் எளிதாக இருந்தன. பத்து மதிப்பெண் வினாவில் விலங்கியல் பகுதியில் கேட்கப்பட்ட முதல் பாடத்திற்கான வினா கடினமாக இருந்தது. இதனால் நேரப்பற்றாக்குறை ஏற்பட்டது.
ஏ.ரெனிட்டா, மாணவி, வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி,புதுவயல்:
தாவரவியலை பொறுத்தவரை எளிதாக இருந்தது. இதில்100 மதிப்பெண்கள் பெறலாம். உயிரியலில் இரண்டு 5 மதிப்பெண் வினாக்களை ஒன்றாக இணைத்து, ஒரு 10 மதிப்பெண் வினாவாக கேட்டிருந்தனர்.இது புளுபிரிண்டுக்கு எதிரானதாக இருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாவை பொறுத்து புத்தகத்தின் உள்ளே இருந்தும் கேட்கப்பட்டதால், சிந்தித்து விடையளிப்பதாக இருந்தது. ரொம்ப எளிது என்று சொல்ல முடியாது கொஞ்சம் கஷ்டம் தான்.
மு.ஐஸ்வர்யா, மாணவி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மானாமதுரை:
தாவரவியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது. விலங்கியல் பாடத்திட்டத்தில் ஒரு மார்க், மூன்று மார்க் கேள்விகள் சிரமமாக இருந்தது. பாடத்திட்டத்தில் உள்ளே மிகவும் நுணுக்கமாக கேள்விகள் இடம் பெற்று இருந்தது. 'சென்டம்' சிரமம் தான்.
ஆர்.அழகர்சாமி, ஆசிரியர், மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி:
தாவரவியலில் அதிக மாணவர்கள் சென்டம் எடுப்பார்கள். உயிரியல் 3 மதிப் பெண் வினா பிரிவு ஆ-வில் 20, 24-வது வினாக்கள் அடிக்கடிகேட்கப்பட்டவையாக இல்லாமல், இந்த முறை கேட்கப்பட்டிருந்தது.5 மதிப்பெண் கட்டாய வினா எளிது. 10 மதிப்பெண் வினாவில் 35-வது கேள்வி தவிர மற்றபடி எளிது. கடந்த முறையை விட இந்த முறை எளிதாக இருந்தது. அதிக மாணவர்கள் 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. வேதியியலில் சோர்ந்து போன மாணவர்களுக்கு பயாலஜி தெம்பை கொடுத்துள்ளது.