ஆறு வயதில் சாலை விழிப்புணர்வு பாடம்: விபத்தில்லாமல் ஆயுளுக்கும் தொடரும்
அவசர மயமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களின் வாழ்க்கையில், 'விபத்து நேருமிடம் பார்த்து செல்லவும்' என்ற வாசகத்தைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அவசரமாய் சென்று, அவர்களின் வாழ்க்கை பயணத்துக்கும் முற்றுப்புள்ளியை வைத்துக்கொள்கின்றனர்.
இந்த நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம் அனைவரிடமும் உள்ள அலட்சியம் ஒன்று தான். குழந்தைகளில் துவங்கி, இளம் தலைமுறைகளை மரணம் வரை அழைத்துச்சென்று பயம் காட்டி வரும் எத்தனையோ சாலை விபத்துக்கள் நாள்தோறும் பல்வேறு இடங்களில் நிகழத்தான் செய்கின்றன.விபத்துக்களுக்கு காலம் காரணமல்ல, கண்மூடித்தனமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளின் வேகமே காரணம் என்பது பலருக்கும் எட்டுவதில்லை.
இத்தகைய சூழலில் பள்ளியிலிருந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையை துவங்குவோம் என, வட்டார போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒரு கட்டமாக, குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பில் பின்பற்ற வேண்டிய குறியீடுகள் மற்றும் வடிவங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி ஜீவிதா, எந்தெந்த குறியீடுகளுக்கு சாலைகளில் வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும்.வேகத்தை கட்டுத்த வேண்டிய இடம், வளைவுகள் என பலருக்கும் தெரியாத சாலை பாதுகாப்பு வடிவங்களைக் கூட தவறாமல் கூறுகிறார். போலீசார் கையில் பிடிபடாமல் இருக்க கட்டாயம், வாகன உரிமம் தேவை என அங்கே இங்கே அழைந்து, ஒருவழியாக லைசென்ஸ் பெறுகின்றனர்.
எத்தனை பேர் சாலை விதிகளை முறையாக அறிந்து, அதை பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியே. ரோட்டோரங்களில் வைத்திருக்கும் அடையாள குறியீடுகளை பார்த்த பின்னரும் அது எதற்காக என்பது தெரியாமல் தவறான வழியிலேயே வாகனத்தை ஓட்டுகின்றனர்.எதிர்கால தலைமுறைகளுக்கு பாடத்தை மட்டுமின்றி வாழ்க்கை முறைகளையும் கற்று கொடுக்க வேண்டியது பள்ளிகளுக்கு அவசியமாகியுள்ளது. அவ்வகையில், இப்பள்ளி குழந்தைகள் பலருக்கும் முன்னோடியாக உள்ளனர். விபத்துகளை தவிர்க்க மட்டுமின்றி, பிறரது உயிருக்கு மதிப்பளித்து, நாமும் இக்குழந்தைகளை பின்பற்றுவோம்.