பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தாமதம்
தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது;
இம்மாத இறுதியில் வர வேண்டிய சுற்றறிக்கை
இதுவரை வராததால் ஆசிரியர் பயிற்றுனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஏப்., மற்றும் மே மாதத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்து கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இவ்வாறு கணக்கெடுக்கப்படும் குழந்தைகள், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
வீடுவீடாகச்சென்று, கணக்கெடுப்பு பணிகள் நடத்த வேண்டுமென்பதால், இரண்டு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை மார்ச் மாத இறுதியிலேயே வட்டார வள மையங்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் குழு அமைத்து பணிகளை துவக்குகின்றனர். நடப்பாண்டுக்கான சுற்றறிக்கை இதுவரை, வட்டார வள மையங்களுக்கு அனுப்பப்படவில்லை. இதனால், கணக்கெடுப்பு பணிகள் நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்குறியான நிலையே உள்ளது.
தவிர, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் தேர்தல் பணிகள் வழங்கப்படுவதால், கணக்கெடுப்பு நடத்துவதில் குழப்பமான சூழலே உள்ளது. ஜூன் மாதத்தில் கணக்கெடுப்பு நடக்கும் என கல்வித்துறை வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், கணக்கெடுப்பு பணிகளை குறைந்த நாட்களிலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதனால், அரைகுறையான கணக்கெடுப்புகளுக்கும் வாய்ப்புள்ளது. விரைவில், கணக்கெடுப்பு பணிகள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டுமென ஆசிரியர் பயிற்றுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.